‘ஜிப்மர்’ நாட்டிற்கு அர்ப்பணிப்பு
புதுச்சேரி: ஜிப்மர், தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா அக்.15ம் தேதி மாலை நடந்தது. மேலும், 93.04 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர் சிறப்பு சிகிச்சை பிரிவின் வெளிப்புற நோயாளிகள் பகுதி, 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விபத்துக்கால அவசர மருத்துவ சேவை பிரிவு மற்றும் 9.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கலை அரங்கம் திறப்பு விழாவும் நடந்தது. ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுப்பாராவ் வரவேற்றார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குத்துவிளக்கேற்றி, தேசிய முக்கியத்துவம் பெற்ற நிறுவனமான ஜிப்மரை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். பின்னர் புதிய கட்டடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார், முதல்வர் வைத்திலிங்கம், மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, பனபாக லட்சுமி, புதுச்சேரி சுகாதார அமைச்சர் வல்சராஜ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் நரேஷ் தயாள் வாழ்த்தி பேசினர்.