விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை
திருச்சி: மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடி, பரிசு பெற்ற வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, கலெக்டர் ஜெயஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: "தமிழகத்தில், விளையாட்டுத் துறைக்கென, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், (SDAT) ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், வரும் கல்வி ஆண்டிற்கான, ஊக்கத்தொகை பெற, விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் இதில் விண்ணப்பிக்க, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிப்பவராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக்கு இடையேயான,விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றிருக்க வேண்டும். மாவட்ட அளவில் பெறப்படும், தகுதியுள்ள விண்ணப்பங்கள், தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில், அதிக மதிப்பெண் பெறும், தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு, முன்னுரிமை வழங்கப்படும். சமர்பிக்கும், விளையாட்டு சான்றிதழ்கள், 1.7.2012 முதல் 30.6.2013 வரை, விளையாடி வெற்றி பெற்றதாக, இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை ஊக்கத்தொகை பெற, www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப விலையாக, 10 ரூபாயை அஞ்சல் ஆணை அல்லது வங்கி வரவோலையாகவோ, நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களுடன், வரும் 30ம் தேதி, மாலை 5 மணிக்குள், உரிய விளையாட்டு சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன், திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த பள்ளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயும், கல்லூரி மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும், தகவலுக்கு, 0431- 2420 685 என்ற, ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.