உள்ளூர் செய்திகள்

பேராசிரியர்களுக்கு குரங்கு தொல்லை

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, தொடர் விடுமுறை விடப்பட்டதால், மாணவர் விடுதிகளில் சுற்றித் திரிந்த குரங்குகள், உணவுக்காக, பேராசிரியர்கள் குடியிருப்பில் புகுந்து கடும் தொல்லை அளித்து வருகின்றன. கவர்னர் மாளிகை அண்ணா பல்கலை வளாகத்தை ஒட்டி உள்ள, காந்தி மண்டபம், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி மையம் மற்றும் கவர்னர் மாளிகை வளாகங்களில், மான், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளும், பாம்பு போன்ற ஊர்வன வகைகளும் அதிகம் உள்ளன. இதனால், அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, திட்டம் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி வளாகங்களிலும், விடுதிகள் அருகிலும், குரங்குகள் மற்றும் மான்கள் நடமாட்டம் அதிகம். விடுதிகளில் புகுந்து, மாணவர்களின் உணவு பொருட்களை, குரங்குகள் பறித்து செல்வது வழக்கம். அதுபோல, கேன்டீன்களில் மாணவர் சாப்பிடும் போதும் குரங்குகள் தொல்லை அதிகம் உண்டு. கன மழையால், அண்ணா பல்கலைக்கு, நவ., 9 முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; பெரும்பாலான மாணவர்கள் ஊருக்கு சென்று விட்டனர். விடுதிகள் பூட்டப்பட்டு, வளாகம் வெறிச்சோடி விட்டதால், உணவுக்கு வழியின்றி, குரங்குகள் இடம் பெயர்ந்துள்ளன. இரண்டு வாரமாக குரங்குகள், மாணவர் விடுதிகளை விட்டு வௌியேறி, குடும்பத்துடன் பேராசிரியர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு, தங்கள் முகாமை மாற்றி உள்ளன. இதனால், பேராசிரியர்களுக்கு குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. குரங்குகளை விரட்ட, குடியிருப்பு பணியாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்