திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு
திருப்பூர்: ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில், திருப்பூரில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்&' என, கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் டிச., மாதம் இரண்டு அல்லது முன்றாவது வாரத்தில், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும். நடப்பாண்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச., 7ம் தேதியும்; பத்தாம் வகுப்புக்கு, டிச., 9ம் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. சென்னை அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பல பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கனமழையால், 11 மாவட்டங்களுக்கு தொடர் விடுமுறை விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மழை காரணமாக, 16ல் திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சென்னையில் இரு வாரங்களாக பள்ளிகள் செயல்படவில்லை. எனினும், திருப்பூரில் திட்டமிட்டபடி, அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி விட்டோம்; அதன்படி, தேர்வு நடத்தப்படும். மற்ற வகுப்புகளுக்கான தேர்வு குறித்து அரசு தரப்பில் இதுவரை எந்த அறிவுறுத்தலும் இல்லை; ஓரிரு நாளில் எதிர்பார்க்கிறோம்,என்றார்.