அரசுக்கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுார் பெரியார் அரசுக்கல்லுாரி மாணவர்கள், தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம், சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேவனாம்பட்டினம் பெரியார் அரசுக்கல்லூரி முன் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் கனிஷ்கர் தலைமையில் மாவட்ட இணைசெயலாளர் சிவன்ராஜ், நிர்வாகிகள் செங்கதிர், கிருபா உட்பட பலர் பங்கேற்றனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதேபோல, சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்டனர். மதியம் 12:00 மணியளவில், மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.மேலும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் விருத்தாசலம் மாவட்ட தலைவர் ராமர் தலைமையிலான கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறி கலைந்து சென்றனர்.