தனித்து காட்டும் தனித்திறன்
பள்ளிக்கூடம் என்றாலே பாடம் படிப்பது, தேர்வு எழுதுவது, மதிப்பெண் வாங்குவது மட்டும் தான் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், வகுப்பறைப் படிப்பைத் தாண்டி பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், போன்ற கூடுதல் செயல்பாடுகள் தான் ஒரு மாணவரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றன. கற்பனைத் திறன் வாழ்க்கைக்குத் தேவையான தன்னம்பிக்கை, பேசும்திறன், பிறருடன் பழகும் பழக்கம் போன்ற பல முக்கியமான விஷயங்களை இத்தகைய செயல்பாடுகள் மூலமாக எளிதாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில், புத்தகங்கள் அறிவைக் கொடுத்தாலும், முழுமையான ஆளுமையை வளர்க்க கூடுதல் செயல்பாடுகளே உதவுகின்றன. பாட்டு, ஓவியம், நாடகம் அல்லது பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் போது கற்பனைத் திறன் அதிகரிக்கிறது. தன்னம்பிக்கைமேடையில் ஏறிப் பேசும் போது பயம் விலகி, தயக்கமின்றி பேசும் தைரியம் வருகிறது. வகுப்பறையில் அமைதியாக இருக்கும் மாணவர்கள் கூட இது போன்ற மன்றங்களில் சேரும் போது சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் மாற முடிகிறது. ஆனால், கூடுதல் செயல்பாடுகளில் கலந்துகொண்டால் படிப்பு பாழாகிவிடும் என்ற தவறான எண்ணம் பலரிடம் இருக்கிறது. உண்மையில், இதில் ஈடுபடும் மாணவர்கள் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுவது உடலுக்குப் புத்துணர்ச்சி தந்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் மனம் அமைதியாகி, பாடங்களை இன்னும் கவனத்தோடு படிக்கவும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் முடிகிறது.நற்பண்புகள் பள்ளி மன்றங்களில் சேர்வதால் புதிய நண்பர்கள் கிடைப்பதோடு, வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களோடு பழகவும், மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு உருவாகிறது. ஒரு குழுவாகச் சேர்ந்து வேலை செய்வது, பிரச்சனைகளை இணைந்து தீர்ப்பது போன்ற நற்பண்புகள் இயல்பாகவே வளர்கின்றன. இங்கு கிடைக்கும் நட்பும் அனுபவமும் பிற்காலத்தில் கல்லூரி மற்றும் பணிபுரியும் இடங்களில் மிகவும் உதவியாக இருக்கும்.தலைமைப் பண்பு இவை தவிர, மன்றப் பணிகளை எடுத்து நடத்துவது மாணவர்களுக்குத் தலைமை பண்பை கற்றுக்கொடுக்கிறது. ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிடுவது, பணிகளைப் பிரித்துக் கொடுப்பது போன்றவற்றைச் செய்யும் போது பொறுப்புணர்வு அதிகமாகிறது. அதே போல, போட்டிகளில் தோற்றாலும் மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும் பழக்கமும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக ஏற்கும் பக்குவமும் மாணவர்களுக்கு கிடைக்கிறது.அதுமட்டுமில்லாமல், பள்ளி பருவத்திலேயே தங்களுக்குப் பிடித்த மன்றங்களில் சேர்ந்து செயல்படும் போது, எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்பது முன்கூட்டியே தெரியவரும். எனவே, மாணவர்கள் வெறும் பாடப் புத்தகங்களோடு நின்றுவிடாமல், ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.