கணித வினாத்தாளில் குளறுபடி
பிளஸ் 2 மாணவர்களுக்கு நடந்த கணிதப் பாட தேர்வில், குளறுபடியாகவும், கடினமாகவும் பல கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் கூட முழு மதிப்பெண் எடுப்பதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான கணிதத் தேர்வு நடந்தது. ஒட்டுமொத்த அளவில் கேள்வித்தாள் நன்றாக இருந்தாலும், சில கேள்விகள் வழக்கத்திற்கு மாறான பகுதிகளில் மாற்றி கேட்கப்பட்டதாலும், சில கேள்விகள் மாணவர்களை திணறடிக்கும் வகையிலும் கேட்கப்பட்டதாலும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கணித ஆசிரியர்கள் கூறியதாவது, "ஒரு மதிப்பெண் பகுதி எளிதாகவே இருந்தது. பத்து மதிப்பெண் பகுதியில் கேட்க வேண்டிய இரு கேள்விகளை, ஆறு மதிப்பெண் பகுதியில் கேட்டிருந்தனர். கேள்வி எண் 53,54 ஆகிய இரண்டும் திடீரென ஆறு மதிப்பெண் கேள்வியில் கேட்கப்பட்டதால், மாணவர்கள் நீண்ட விடை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், நேரமும் வீணானது. பத்து மதிப்பெண் பகுதியில் 70வது கேள்வி கட்டாய கேள்வியாக கேட்கப்பட்டது. இதில், ஏ அல்லது பி என இரு கேள்விகளாக தரப்பட்டிருந்தன. இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு விடை அளிக்க வேண்டும். இதில் ஒரு கேள்வி பாடப் புத்தகத்தின் முதல் தொகுதியிலும், ஒரு கேள்வி இரண்டாவது தொகுதியிலும் கேட்கப்படும். இந்த முறை இரு கேள்விகளையுமே இரண்டாவது தொகுதியில் இருந்து கேட்டுவிட்டனர். அதுவும் மாணவர்கள் எதிர்பார்க்காத கேள்விகளாக அவை இருந்தன. இரண்டாவது தொகுதியில் கவனம் செலுத்தாத மாணவர்கள் இந்த கட்டாய கேள்விக்கு பதிலளிக்கவில்லை. இதனால், அவர்களுக்கு பத்து மதிப்பெண்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி பாடப் புத்தகத்தில் இல்லை. இந்த கேள்வியையொட்டி, பத்து மதிப்பெண் பகுதியில் கேள்விகள் வரும். இருந்தாலும், நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் 47வது கேள்விக்கு பதிலளித்தனர். மற்ற மாணவர்கள் 47வது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். மேலும் ஆறு மதிப்பெண் பகுதியில் 51வது கேள்வியில் அச்சுப் பிழை இருந்தது. இதனால், மாணவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இதற்குரிய மதிப்பெண்களை முழுமையாக மாணவர்களுக்கு அளிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும்" என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். சென்னையில் மயிலாப்பூர் உள்ளிட்ட சில மையங்களில் தேர்வெழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள், கடினமான கேள்விகள் காரணமாக அழுதபடி வந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். குளறுபடியான கேள்விகள், எதிர்பார்க்காத கேள்விகள் மற்றும் பாடப் புத்தகத்தில் இல்லாத கேள்வி ஆகியவை கேட்கப்பட்டதால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களும், கணிதத்தில் "சென்டம்" எடுக்க முடியுமா என்று சந்தேகம் அடைந்துள்ளனர்.