மாணவர்களுக்கு கலாமின் 10 கட்டளைகள்
மதுரை, மகாத்மா மாண்டிசொரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: மகாத்மா காந்தியின் ஒன்பதாவது வயதில், அவர் தாய் கூறிய அறிவுரை நினைவுக்கு வருகிறது. ‘மகனே! உன் வாழ்வில், துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரை அதில் இருந்து மீட்டால், கடவுள் எப்போதும் உனக்கு அருள் செய்வார்’ என்றார். இந்த அறிவுரையை எல்லா மனிதரும் கடைபிடிக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கு மாணவர்கள் 10 உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் எனது வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன். நன்றாக உழைத்து படித்து, வாழ்வில் இலட்சியத்தை அடைய முயற்சிப்பேன். எனது விடுமுறையில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்து பேருக்கு எழுதப் படிக்க சொல்லித் தருவேன். என் வீட்டிலோ, பள்ளியிலோ குறைந்தது ஐந்து செடிகளை நட்டு, பாதுகாத்து, வளர்த்து மரமாக்குவேன். மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி துயருருவோர் ஐந்து பேரை மீட்டு, நல்வழிப்படுத்த முயற்சிப்பேன். ஜாதி, மதம், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பாராட்டாமல் அனைவரையும் சமமாக நடத்துவேன். நான் என் வாழ்வில் நேர்மையாக நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயல்வேன். என் தாய், தாய் நாடு இரண்டையும் நேசித்து பெண் குலத்துக்கு உரிய மரியாதை, கண்ணியம் காப்பேன். நாட்டில் அறிவு தீபம் ஏற்றி அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன். இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். நிகழ்ச்சியில், வெள்ளி விழா மலரை அப்துல் கலாம் வெளியிட, அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நம்பெருமாள் சாமி பெற்றுக்கொண்டார்.