மாணவர் பாதுகாப்புக்கு 17 கட்டளை மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் படிக்கும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக படிப்பதை உறுதி செய்யும் வகையில், 17 அம்ச பாதுகாப்புத் திட்டங்களை பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 23 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்திற்குப் பிறகு, மாணவர்களின் பாதுகாப்பு விவகாரங்களில் கல்வித் துறை அதிகாரிகள் அதிக கண்டிப்புடன் இருக்கின்றனர். மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 17 அம்ச பாதுகாப்பு திட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று துறை இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார். பள்ளி ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து கட்டுமானப் பகுதிகளுக்கும் கட்டட உறுதிச் சான்று பெற வேண்டும். வகுப்பறைகள் மட்டுமில்லாமல், ஆய்வகம், கழிவறை பகுதிகள், நுழைவாயில், சைக்கிள் நிறுத்தப் பகுதி, உணவருந்தும் பகுதி என அனைத்து கட்டுமானங்களுக்கும் கட்டட உறுதிச் சான்று தேவை. மாடிப்பகுதிகளில், போதிய உயரத்திற்கு பாதுகாப்பான வகையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும். மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், மாணவர்களுக்கு உதவ இரண்டு பணியாளர்களை நியமிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில், குறிப்பிட்ட மாணவர்களை விட கூடுதலாக ஏற்றக் கூடாது. மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல, மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அல்லது பிற அரசுத் துறைகளால் நடத்தப்படும் போட்டிகள், இதர நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முன் அனுமதி தேவையில்லை. எனினும், அது குறித்த தகவல்களை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவை உட்பட 17 உத்தரவுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.