ஐ.ஏ.எஸ்.,முதல்நிலை தேர்வில் 188 பேர் தேர்வு
சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில், 2011 ஐ.ஏ.எஸ்., முதல் நிலைத் தேர்வில், தேர்வு எழுதிய, 188 பேர் தேர்வு பெற்றனர். முதன்மை தேர்விற்கு பயிற்சியும் தொடங்கியது. இந்தியக் குடிமைப்பணிக்கான தேர்வுகளின் முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்த மையத்தில் பயின்ற, 188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், 110 பேர் மாணவர்கள். 78 மாணவியர். பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும், தரமான பயிற்சி, பயிற்சி கையேடுகள், செய்தித் தாள்கள், புத்தகம், நூலக வசதி, கம்ப்யூட்டர், இணையதள வசதி ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில், ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., பதவிகளுக்கு, 110 பேரும், இந்திய வனத்துறை பணி பதவிகளுக்கு, 12 பேரும், மற்ற அகில இந்திய பதவிகளுக்கு, 11 பேரும், ஆக மொத்தம், 133 மாணவ - மாணவியர் தேர்வு பெற்று பணியிலும், பயிற்சியிலும் உள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் சிவில் சர்வீஸ் தேர்வில், 36 பேரும், குரூப்-1 தேர்வில், 50 பேரும், மனிதநேய ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தில் பயிற்சி பெற்ற மாணவ - மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மை தேர்விற்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு, தக்க நிபுணர்களைக் கொண்டு, மாதிரி நேர்முகத் தேர்வுகள் இந்தியாவில் மனிதநேயத்தில் மட்டுமே, ஐந்து மாத கால பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.