உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 2 தேர்வு: தேதி மாற்ற டாக்டர்கள் கோரிக்கை

சென்னை: அகில இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் சார்பில் நடக்கும், எம்.டி., தேர்வும், தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தேர்வும், ஒரே நாளில் நடப்பதால், டாக்டர்கள் பலர், எதை எழுதுவது என்ற குழப்பத்தில் உள்ளனர். எம்.பி.பி.எஸ்., முடித்து உயர் படிப்பான, எம்.டி., தேர்வு, அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. அகில இந்திய இன்ஸ்டிடியூட் மெடிக்கல் சயின்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படும் இத்தேர்வு, வரும் மே, 12ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கு, 1,000 ரூபாய் நுழைவு கட்டணம்; தமிழகத்தில், 5,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதுவர் என, தெரிகிறது. இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனையில், காலியாக உள்ள, 911 டாக்டர் பணியிடங்களுக்கு, தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், மே, 12ம் தேதி தேர்வு நடக்கிறது. இதற்கு, 700 ரூபாய் கட்டணம்; இத்தேர்விலும், 5,000 முதல், 10 ஆயிரம் பேர் வரை, தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில் சிலர், உயர் படிப்பான, எம்.டி., தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வு வாரிய தேர்வும், அதே தேதியில் அறிவிக்கப்பட்டு இருப்பதால், எந்தத் தேர்வை எழுதுவது என்பதை, முடிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக முதல்வர் மற்றும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்துக்கு, பாதிக்கப்பட்டவர்கள், மனு அனுப்பி உள்ளனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என, டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்