ரத்தான குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடத்தப்படும்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
சென்னை: தேர்வு மையம் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்ட 'குரூப் 2, 2ஏ' தேர்வுகள், மார்ச் 15ம் தேதி நடத்தப்பட உள்ளன.டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'குரூப் 2, 2ஏ' முதன்மை தேர்வுகள், நேற்று முன்தினம் நடக்க இருந்தன. இந்த தேர்வை, 10,000க்கும் அதிகமானோர் எழுத தயாராக இருந்தனர்.சென்னையில் குரூப் 2, 2ஏ தேர்வர்களுக்கு, தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் தவறு நடந்ததாகவும், இதனால் மாநிலம் முழுதும் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அறிவித்தார். இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 8ம் தேதி நடக்கவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது.அந்த வகையில், குரூப் 2ஏ பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறி தேர்வு, மார்ச் 15ம் தேதி காலையிலும்; குரூப் 2, 2ஏ, தமிழ் மொழித் தகுதித் தேர்வு, அன்றைய தினம் மாலையிலும் நடக்கும்.இதற்கான, 'ஹால் டிக்கெட்' வரும் 28ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும். இது தொடர்பான விபரங்கள், தேர்வர்களின் இ - மெயில் முகவரிக்கும், மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.