தமிழகத்தில் குரூப் 2, 2 ஏ, தேர்வு மாவட்டத்தில் 19,122 பேர் பங்கேற்பு
கடலுார்: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (குரூப் - 2, 2ஏ) தேர்வில் 19,122 பேர் தேர்வு எழுத உள்ளனர்.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 40 தேர்வு மையங்களில் 63 தேர்வுக் கூடங்களில் வரும் செப்டம்பர் 1ம் தேதி குரூல் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நடக்கிறது. இதில் 19,122 பேர் பங்கேற்கின்றனர்.இதில் முற்பகல் மட்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு வரும் 1ம் தேதி முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 9.00 மணிக்கு பிறகு வருகை தரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வரவேண்டும்.தவறும் பட்சத்தில் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் (அல்லது) நகல் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றின் நகல் உடன் தேர்வுக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும். மேலும், தேர்வு கூடத்திற்கு தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச், தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்டு வர அனுமதியில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.