உள்ளூர் செய்திகள்

ஆடிட்டர்களின் தேவை 2.7 லட்சமாக உயரும்

இந்திய பட்டயக் கணக்காளர் (ஆடிட்டர்கள்) சங்கத்தின் தென் மண்டல மாநாடு, ஞான சங்கமம் கோவையில் துவங்கியது. சங்கத்தின் தலைவர் ராமசாமி பேசியதாவது: இந்திய அளவில், ஆடிட்டராக விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை, 2.70 லட்சமாக உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போதுள்ள ஆடிட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆடிட்டர் பணிக்கு படிப்பதை பலரும் தவிர்க்க காரணமாக, இதன் கடினமான கல்வி முறை அமைந்துள்ளது. அதேசமயம், பட்டப்படிப்பு முடிப்போர் பலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. எளிதாக ஏதாவது ஒரு வேலை கிடைத்து விடுவதால், இப்படிப்புக்கான முயிற்சியை பலரும் கைவிட்டு விடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் ஆடிட்டர்களின் 90 சதவீதம் பேர் நிறுவனங்களின் பணிக்கு செல்லவே விரும்புகின்றனர். நிறுவனங்களில் இவர்ளுக்கு பல லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 55 லட்ச ரூபாய் சம்பளம் பெறும் ஆடிட்டர்களும் உள்ளனர். தொழிலாக இதை செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வெளிநாடுகளிலும் இந்திய ஆடிட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் இந்திய தணிக்கை முறை இரண்டாவது மிகப்பெரியதாக வளர்ச்சி பெற்றுள்ளது. விரைவில் இது முதலிடத்தை பெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இளம் தலைமுறையினரை இந்த துறையை தேர்வு செய்ய ஊக்குவிக்க வேண்டும். இந்திய பட்டயக்கணக்காளர் சங்கம், தொடர்ந்து அதன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயிற்சியில் மேற்கொண்டு வருகிறது. அதோடு, கூடுதல் கல்விமுறைகளையும், சான்றிதழ் வகுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்