உள்ளூர் செய்திகள்

டி.ஆர்.பி., தேர்வுக்கு நவ.,4ல் விண்ணப்பம்

சேலம்: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரிடையாக, 34 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர், 4ம் தேதி முதல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட நிர்வாக வசதிகளை செய்து தரவும், பள்ளிகளை கண்காணிக்கவும், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இதில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கப்படுவர். இதில் நேரிடையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதும் வழக்கம். தற்போது தமிழகம் முழுவதும், 34 உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்-3, ஆங்கிலம்-4, கணிதம்-3, இயற்பியல்-3, வேதியியல்-6, தாவரவியல்-4, விலங்கியல்-4, வரலாறு-3, புவியியல்- 4 என பாடவாரியாக மொத்தம் 34 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திலும் வழங்கப்படுகிறது. விண்ணப்ப தொகை, 50 ரூபாய் நேரில் கொடுத்து, விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் 19ம் தேதி மாலை, 5.30 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். இதற்கான நேர்முகத்தேர்வு ஜனவரி 8ம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பும் முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி.,யினர், 40 வயதுக்குள் இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்