‘சில்லரை வர்த்தகம் 5 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரிக்கும்’
புதுடில்லி: ’நாட்டின் சில்லரை வர்த்தகத்தின் அளவு, இன்னும் ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள நிலையில் இருந்து, இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2020ம் ஆண்டிற்குள், 60 லட்சம் கோடி ரூபாயாக, இந்திய சில்லரை வர்த்தகத் துறையின் விற்றுமுதல் இருக்கும்’ என, பிரபல நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. ’பாஸ்டன் கன்சல்டிங் குரூப்’ மற்றும் இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள, சில்லரை விற்பனை தொடர்பான புள்ளிவிவரம்: சில்லரை வர்த்தகம், நவீன வர்த்தகம், பாரம்பரிய வர்த்தகம் என, இரு பெரும் பிரிவுகளாக உருவெடுத்துள்ளது. நவீன வர்த்தகத்தில், சூப்பர் மார்க்கெட், ஹைபர் மார்க்கெட் போன்ற பிரமாண்ட வளாக வர்த்தக மையங்கள், இணைய வர்த்தகம் போன்றவை அடங்கும். பாரம்பரிய வர்த்தகம் என்ற பிரிவில், சாதாரண கடைகள், மளிகை, துணிகள், மருந்து பொருட்கள் போன்றவற்றை விற்கும் கடைகள் அடங்கும். இந்த இரு பிரிவு வர்த்தகமும் அதிகரித்து வருகின்றன. இவை இரண்டும் சேர்ந்த சில்லரை வர்த்தகம், அபரிமித வளர்ச்சியை அடையும். அதிலும் குறிப்பாக, நவீன வர்த்தகம், அதிகமாக வளர்ந்து, இன்னும், ஐந்தாண்டுகளில், இரண்டு மடங்காக அதிகரிக்கும். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, முக்கிய அம்சங்களாவன: *சில்லரை வர்த்தகம், ஆண்டுக்கு, 12 சதவீதம் என்ற அளவில் உயரும்.*நவீன வர்த்தகம், இப்போது, ஆண்டுக்கு, 10 சதவீதமாக இருப்பது, 20 சதவீதமாக அதிகரிக்கும். *பாரம்பரிய வர்த்தகம், ஆண்டுக்கு, 10 சதவீதமாக உயரும்.*நகரமயமாக்கல், இப்போதுள்ள, 31 சதவீதத்திலிருந்து, 40 சதவீதமாக உயரும். *20 கோடி தனித்தனி குடும்பங்கள் உருவாகும். *இணையம் மூலம் நுகர்வோர், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வர். சாதாரண சில்லரை வர்த்தக பொருட்கள் துவங்கி, வீடு, கார், இருசக்கர வாகனங்கள், நகைகள் போன்றவற்றையும், இணையம் மூலமே வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.*இப்போது, 3.5 கோடி பேராக இருக்கும் இணையம் மூலம் நுகர்வோர் பொருட்களை வாங்குபவர்கள், இன்னும் இரண்டாண்டுகளில், 10 கோடி பேராக அதிகரிப்பர்.*இதன் மூலம், இன்னும், ஐந்தாண்டுகளில், நவீன வர்த்தகத்தின் அளவு, ஆண்டுக்கு, 60 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இது, இப்போது, 36 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கடைகள் திறக்க ’வால்மார்ட்’ திட்டம்: ’வால்மார்ட்’ இந்தியா நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50 பல்பொருள் விற்பனை நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இங்கு, வணிகர்களின் மறுவிற்பனைக்கான பல்வேறு பொருட்கள், மொத்த விலையில் விற்பனை செய்யப்படும். அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனத்தின், துணை நிறுவனமான, வால்மார்ட் இந்தியா, கடந்த ஆண்டு, பார்தி குழுமத்துடன் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டு, தனியே இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தற்போது, நாட்டின் பல நகரங்களில், 20 கடைகளை நடத்தி வருகிறது. ஆக்ராவில், வரும் செப்டம்பரில், 21வது கடையை திறக்க திட்டமிட்டுள்ளது. ”அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50 கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என, வால்மார்ட் இந்தியா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிரிஷ் அய்யர் தெரிவித்தார். தற்போது, ஐந்து இடங்களில், இதே காலத்தில், மேலும், 15 இணைய வர்த்தக கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக, அவர் கூறினார். தற்போது, இந்நிறுவனத்தின் இணையம் வாயிலான விற்பனைக்கு, ஐந்து கடைகள் உள்ளன. இதே போன்று, ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’ நிறுவனமும், 140 கோடி ரூபாய் விரிவாக்கத் திட்டத்தில், அடுத்த ஓராண்டில், 14 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், தற்போது 73 கடைகள் வாயிலாக, ஆடை, அலங்கார சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குடும்ப வருவாயும் அதிகரிக்கும்: நவீன சில்லரை வர்த்தகம் அதிகரிப்புக்கு காரணம், இளைஞர்கள். குறிப்பாக, இப்போது 14 வயதுக்கு கீழே இருப்பவர்கள், இன்னும், ஐந்தாண்டில் வாங்கும் திறன் உடையவர்களாக மாறுவர். அத்தகையவர்களின் எண்ணிக்கை, பல கோடியாக உள்ளதால், வாங்கும் திறன் அதிகரித்து, விற்பனை கிடுகிடுவென உயரும். அந்த வகையில், சராசரி குடும்ப வருவாய், 3.83 லட்சம் ரூபாயாக இருப்பது, இன்னும் ஐந்தாண்டுகளில், 11 லட்சம் ரூபாயாக உயரும். இது, நவீன விற்பனையை ஊக்குவிக்கும்.