ஆர்.டி.இ., சேர்க்கைக்கு 81,000 பேர் விண்ணப்பம்
சென்னை: தமிழகத்தில் ஆர்.டி.இ., சேர்க்கைக்கு, 81,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.பள்ளி கல்வி துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:நீதிமன்ற உத்தரவுக்கு பின், ஆர்.டி.இ., எனும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.இதையடுத்து, இந்த கல்வியாண்டுக்கான ஆர்.டி.இ., அடிப்படையில் மாணவர்களை சேர்க்க, 7,717 பள்ளிகள் முன்வந்து உள்ளன. அவற்றில், எல்.கே.ஜி.,யில் சேர, 81,927; முதல் வகுப்பில் சேர, 89 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.பள்ளிகளில், 25 சதவீத இடங்களை விட குறைவாக விண்ணப்பித்துள்ள பள்ளிகளில், தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை, வரும் 30ம் தேதியும், ஒதுக்கீட்டை விட அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பள்ளிகளில், தலைமை ஆசிரியர், பெற்றோர் முன்னிலையில், குலுக்கல் முறையில், 31ம் தேதியும் சேர்க்கை நடைபெறும்.இதில், ஆதரவற்றோர், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டோர், மாற்றுப்பாலினத்தவர், துாய்மை பணியாளர், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.