பயிற்சி வகுப்பு
கோவை: சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பயிற்சி வகுப்பு நடந்தது.மேயர் கல்பனா துவக்கி வைத்த இப்பயிற்சி வகுப்பில், 40க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி பேசுகையில், பள்ளி மேலாண்மை குழுவில் அங்கம் வகிக்கும், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்று, பள்ளியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்தல், தரமான கல்வி போன்றவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசின் திட்டங்கள் பள்ளிகளை நோக்கி மாணவர்களையும், பெற்றோரையும் ஈர்க்கிறது, என்றார்.தொடர்ந்து, பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு, மேம்பாட்டு திட்டங்கள், தரமான மதிய உணவு திட்டம், பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல், பாலியல் வன்முறை, சமூக விரோத செயல்பாடுகளில் இருந்து பள்ளி குழந்தைகளை பாதுகாத்தல் உள்ளிட்டவற்றில் கவுன்சிலர்களின் பங்களிப்பு குறித்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.