உள்ளூர் செய்திகள்

தேர்ச்சி 100 சதவீதம் வசதிகள் பூஜ்ஜியம்!: கொஞ்சம் கவனியுங்க!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அரசுப்பள்ளிக்கு நிரந்தர கட்டட வசதியில்லை. தற்காலிகமாக செயல்படும் ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் போதிய வசதிகளின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அரசு மனது வைத்து பள்ளிக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி அருகேயுள்ள, மாக்கினாம்பட்டி நடுநிலைப்பள்ளி கடந்த, 2014ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அரசு உத்தரவின்படி கடந்த, 2018ம் ஆண்டு இப்பள்ளியின் பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டது.இதையடுத்து, தற்காலிகமாக ஊராட்சி சேவை மைய கட்டடத்துக்கு பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டது.தற்போது, பள்ளியில், 262 மாணவர்கள் படிக்கின்றனர்; 16 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆனால், நிரந்தர கட்டட வசதியில்லாமல் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.ஐந்தாண்டுகளாச்சுபராமரிப்பில்லாத கட்டடம் இடிக்கப்பட்டும், இதுவரை நிரந்தர கட்டடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐந்தாண்டுகள் கடந்தும், புதுக்கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் இல்லாதது வேதனையான விஷயம்.தற்போதுள்ள, சேவை மைய கட்டடத்தில் இருக்கும் வகுப்பறைகளில் இட நெருக்கடியில் அமர்ந்து, மாணவர்கள் கல்வி பயில வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு விதிமுறைப்படி அமைக்கப்படாத கட்டடத்தில், மாணவர்கள் அருகருகே அமர்ந்து, காற்றோட்ட வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால், கல்வி கற்பதும் பாதிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை.தற்காலிக ஷெட்மாணவர்கள் இட நெருக்கடியில் அமர்ந்து படிக்க சிரமப்படுகின்றனர். இதற்கு மாற்றாக தன்னார்வலர்கள் உதவியுடன், பள்ளி வளாகத்தில் தற்காலிக ெஷட் அமைத்து, மூன்று வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.எதுவுமே இல்லைகுடிநீர், கழிப்பிடம் என எவ்வித வசதியுமின்றி மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். 262 மாணவர்கள், 16 ஆசிரியர்களுக்கும் மூன்று கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. இதையே அனைவரும் பயன்படுத்த வேண்டியுள்ளதால், அவசரத்துக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.தாகம் தீர்க்க குடிநீரும் பற்றாக்குறையாக உள்ளது. பள்ளி அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து, குடத்தில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது. மைதான வசதியில்லாத சூழலிலும், ஆசிரியர்கள் வழிகாட்டுதலோடு இருக்கும் இடத்தில் விளையாட்டு திறமை மேம்படுத்தி சாதனை படைக்கின்றனர்.பெருமை சேர்க்கும் பள்ளிஅடிப்படை வசதிகள் இல்லாத சூழலிலும், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்கள் குறை வைப்பதில்லை. கடந்தாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.இங்கு பயிலும், மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் படைக்கின்றனர். ஆனால், அதற்கேற்ப வசதிகளை மேம்படுத்த யாரும் அக்கறை செலுத்தாதது வேதனையாக உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மக்கள் பிரதிநிதிகள் இந்த பள்ளியை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் புரியவில்லை. தேவையான வசதிகளை மேம்படுத்தி கொடுத்தால், இப்பள்ளி மாணவர்கள் சாதிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக இருக்கும்.அரசு மனது வைத்து பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் கட்டடத்தையும் கட்டி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர். பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிக்கு நிரந்தர கட்டட வசதியுடன், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க எம்.எல்.ஏ., மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.பள்ளிக்கு சொந்தமான, 69 சென்ட் இடமும் உள்ளது. அங்கு கட்டட வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியுள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்