உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு : முறைகேடுகளில் ஈடுபட்ட 115 மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வில் நேற்று வரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்ட மாணவர்கள் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2ம் தேதி முதல் நடந்து வரும் பிளஸ் 2 தேர்வில், "பிட்&' வைத்து தேர்வெழுதியது, பக்கத்து மாணவர்களின் விடைத்தாளை வாங்கி எழுதியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 11ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வுடன் 87 மாணவர்கள் பிடிபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வுகள் நடந்தன. "வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததால், தேர்வை நன்றாக எழுதியிருக்கிறோம்" என, சென்னையில் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். பாட ஆசிரியர்களும், "வினாத்தாளில் எந்தவித பிரச்னையும் இல்லை" என்றனர். எனினும், வேதியியலில் 21 மாணவர்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஏழு மாணவர்களும் முறைகேடுகளில் ஈடுபட்டு, பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டனர். சேலம் மாவட்டத்தில் மூன்று மாணவர்கள், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவர், கடலூர் மாவட்டத்தில் 10 மாணவர்கள், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா இரண்டு மாணவர்கள், கோவை மாவட்டத்தில் மூன்று மாணவர்கள், சென்னை மாவட்டத்தில் நான்கு மாணவர்கள் பிடிபட்டனர். இவர்களுடன் சேர்த்து, முறைகேடுகளில் சிக்கிய மாணவர்கள் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்