பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.மதுரையில் அச்சங்க மாநில தலைவர் கே.பி.ஓ., சுரேஷ் கூறியதாவது:நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கின்றனர். இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தும் மே 4ல் துவங்க இருந்த பிளஸ் 2 தேர்வை தேதி குறிப்பிடாமலும் மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் மே 7 முதல் நடக்கவுள்ள பிளஸ் 2 பொதுதேர்வை ரத்து செய்ய வேண்டும்.இத்தேர்வை எட்டு லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். ஒரு லட்சம் ஆசிரியர் பணியில் ஈடு படுத்தப்படுவர். மாணவர் ஆசிரியர் நலன் மற்றும் கொரோனா தொற்று தீவிரத்தை உணர்ந்து பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.