பிளஸ் 2 வினாத்தாள் வந்தாச்சு
மதுரை: பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதி தெரியாத நிலையில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பது அதிகாரிகளுக்கு சவாலாகியுள்ளது.மே 3ல் பிளஸ் 2 பொது தேர்வு துவங்க இருந்தது. மே 2ல் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் மே 3 தேர்வு, 31க்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதீத பரவலால் தமிழக அரசு பிளஸ் 2 தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வு முடிந்தவுடன் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.இந்நிலையில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் வினாத்தாள்கள் 9 நோடல் மையங்களில் இறக்கி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.ஆசிரியர்கள் கூறுகையில் “தேர்வு தேதியே முடிவு செய்யவில்லை. ஆனால் வினாத்தாள்கள் வந்து விட்டன. அவற்றை பாதுகாப்பது மாவட்ட அதிகாரிகளுக்கு பெரும் சிரமம். இத்துறை அறிவிப்புகள் மட்டுமே முன்னுக்கு பின் முரணாக, குழப்பமாக அமைகிறது. இத்துறையின் &'கடமை&'க்கு அளவில்லாமல் போய் விட்டது” என்றனர்.