மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
திண்டுக்கல்: மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்வு செய்தாலும் ஒழுக்கத்துடன் கூடிய திறமைகளை வளர்த்துக்கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் வலியுறுத்தினார்.திண்டுக்கல்லில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் குறித்த ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் அஸ்வின் பேசியதாவது:எதிர்கால வேலைக்கு தேவையான தகுதிகளை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் என அனைத்து படிப்புகளுமே பயனுள்ளவையே. ஆனால் 'மூன்றாம் திறமை' என கூறப்படும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்வது மிக அவசியம்.உலகம் எதை எதிர்பார்க்கிறதோ அவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல படிப்பை தரமான கல்லுாரிகளில் படிக்க வேண்டும். உதாரணமாக பி.காம்., படிப்பது தவறில்லை. ஆனால் எதற்காக படிக்கிறோம் என்பதை புரிந்துகொண்டு படிக்க வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதற்கான தகுதியை படிக்கும் போது வளர்த்துக்கொண்டால் தான் இலக்கை அடைய முடியும்.படிப்பதை ஆழமாக படிக்க கற்றுகொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கு தேவைப்படும் திறமைகளை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். தற்போதைய உலகம் ஒழுக்கத்துடன் கூடிய திறமையானவர்களை தான் எதிர்பார்க்கிறது. வணிகவியல் படித்த மாணவர்கள் அக்ரிகல்சர் அண்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகளையும், அறிவியல் மாணவர்கள் பி.இ., அக்ரி இன்ஜி., எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், கட்டடக் கலை உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம். படம் வரையும் திறமையுள்ளவர்கள் பேஷன் டிசைன்ஸ் தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்யலாம்.இதுதவிர ஏ.ஐ., சைபர் செக்கியூரிட்டி, சிவில், என அனைத்துக்கும் எதிர்காலம் உள்ளது. படிக்கும் போது ஜெர்மன், ஜப்பான் போன்ற அயல்நாட்டு மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.5 லட்சம் தொழிற்சாலைகள்தொழிலக பாதுகாப்பு களத்தின் எதிர்காலம் தொடர்பாக மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் விவேக் ராம்குமார் பேசியதாவது: பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்க வேண்டும் என பெரும்பாலும் பெற்றோர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தாலும் படிப்பை தேர்வு செய்வது தற்போது மாணவர்கள் தான். பெரும்பாலோனோருக்கு அதிகம் தெரியாத படிப்பு தீ மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு. இத்துறைப்படிப்பு மிக முக்கியமானது.தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுப்பதற்கான படிப்புகள் எதிர்காலத்தில் அதிகம் வேலை வாய்ப்புகளை தரக்கூடியவை. தமிழகத்தில் பெரிய, சிறிய வகையாக 5 லட்சம் தொழிற்சாலைகள் உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அரசு உத்தரவுப்படி 500 தொழிலாளருக்கு ஒரு 'பயர் சேப்டி' அதிகாரிகள் பணியிடங்கள் தேவையாக உள்ளன. துபாய், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ள நாடுகளுக்கும் இப்படிப்பு படித்தவர்கள் அதிகம் தேவை. பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.இதுதவிர தொழிற்சாலைகள், மெட்ரோ திட்டங்கள் உற்பத்தி நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் சில கல்லுாரிகளில் மட்டுமே இப்படிப்புகள் உள்ளன. உரிய அங்கீகாரம், அடிப்படை வசதிகள் உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள். பெண்கள் இத்துறையில் அதிகம் சாதிக்கலாம்.இலக்கை அடைய திட்டமிடல் அவசியம்தனித்திறன்கள் மேம்பாடு குறித்து திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி பேராசிரியை பூமா பேசியதாவது: திறன் மேம்பாடு மாணவர்களுக்கு மிக முக்கியம். ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு திறமை உள்ளது. அதை கண்டுபிடித்து வெளிக்கொண்டுவர வேண்டும். இன்றைய இளைஞர்களிடையே புத்தகம் வாசிப்பது குறைந்து விட்டது. தற்போது இ-புத்தகம் வாசிப்பது தான் அதிகரித்துவிட்டது.வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்பது எல்லோருக்கும் லட்சியம். அதற்க இலக்கை நோக்கி சரியான பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கு அர்ப்பணிப்பு, ஒழுக்கம், திட்டமிடல் போன்ற அம்சங்கள் மிக முக்கியம். கற்றல், அறிவாற்றல், வாழ்வியல் திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த முடிவுகளையும் வித்தியாசமாக மேற்கொள்ள தெரிந்திருத்தல், கேள்விகள் கேட்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.