உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் 65 சதவீத மாணவர்களிடம் மொபைல் போன்

புதுடில்லி: நாட்டில் 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் சொந்தமாக மொபைல் போன் வைத்துள்ளதாக, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (அசோசம்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் கலாசாரம் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறி பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்கள் மத்தியில் மொபைல் போன் கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த புள்ளி விவரங்களை பெறுவதற்காக டில்லி, மும்பை, சென்னை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள 2,500 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மொபைல் போன் வைத்துள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. இதுகுறித்து அசோசம் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சொந்தமாக மொபைல் போன் வைத்துள்ளனர். குறிப்பாக, 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் சொந்தமாக மொபைல் போன் உள்ளது. பெற்றோர்களிடமிருந்து கைசெலவுக்கு தாராளமாக பணம் கிடைப்பதாலும், கண்காணிப்பு இல்லாததாலும் மாணவர்கள் மொபைல் போனை எளிதில் வாங்கி பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை இருந்த போதும், மொபைல் போன் கையில் இல்லாத மாணவர்களே இல்லை என்று கூறலாம். மொபைல் போன் வைத்திருப்பதை அவர்கள் நவநாகரிகமாக கருதுகின்றனர். மேலும், தவறான வழிகளுக்கும் மாணவர்கள் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். இதனால், மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மொபைல் போன் வைத்திருக்கும் தங்களது குழந்தைகள் எந்த நேரமும் பரபரப்புடன் இருப்பதாகவும், அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பதாகவும் 90 சதவீத பெற்றோர் தெரிவித்தனர். ஆனால், 50 சதவீத பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் போன் பெரிதும் உதவுவதாக தெரிவித்தனர். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்