100 மஞ்சள் நிற பஸ்கள் 11ம் தேதி முதல் வீதி உலா
சென்னை: தமிழகத்தில், 100 மஞ்சள் நிற பஸ்களின் சேவை வரும், 11ம் தேதி துவங்குகிறது என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை. தற்போது, 3,200 புதிய பஸ்கள், 1,000 புனரமைக்கப்பட்ட பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்களில் இணைக்கும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பணியாளர் பற்றாக்குறையை போக்கவும், புதிய பஸ்களை இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக தயாராக உள்ள புனரமைக்கப்பட்ட, 100 மஞ்சள் நிற பஸ்கள் சேவை வரும், 11ம் தேதி துவங்கும். ஒவ்வொரு பஸ்சுக்கும், 14 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக ஒரு பஸ்சில், 54 இருக்கைகள் இருக்கும். இடநெருக்கடியால் பயணியர் அவதிப்படுவர். ஆனால், மஞ்சள் நிற பஸ்களில், 50 இருக்கை கள் மட்டுமே இருக்கும். எஞ்சி உள்ள, 900 மஞ்சள் நிற பஸ்களும் அடுத்தடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். போக்குவரத்து கழகங்களுக்கு புதிய ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி வரும், 11ம் தேதி துவங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழகத்தில் பள்ளி வாகனங்களும், மஞ்சள் நிறத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.