15 கோடி ரூபாய் மதிப்பில் திருக்கோவிலூர் அரசு கலைக் கல்லுாரி கட்டடம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு 15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவங்க உள்ளது.திருக்கோவிலுார் அரசு கலைக்கல்லுாரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. தற்போது சந்தைப்பேட்டை பாரத் மழலையர் பள்ளி வளாகத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. கல்லுாரியில் 535 மாணவர்கள் பயின்று வருகின்னர். 30 பேர் பணிபுரிகின்றனர்.கல்லுாரிக்கு போதுமான இடவசதி இல்லாததால் காலை, மாலை என ஷிப்ட் முறையில் கல்லுாரி இயங்குகிறது. இந்நிலையில் வரும் ஆண்டு புதிதாக மாணவர் சேர்க்கை நடந்தால் கல்லுாரி இயக்குவது சிரமம். இச்சூழலில் கல்லுாரிக்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை சமீபத்தில் பார்வையிட்டு உறுதி செய்தார்.அதனைத் தொடர்ந்து, சந்தைப்பேட்டை பத்மாவதி திருமண மண்டபத்திற்கு கிழக்கே உள்ள அரசு இடத்தில் கல்லுாரி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு, கல்லுாரி கட்டடம் கட்ட 15.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிக்கான ஆயத்த பணிகள் துவங்க இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.