2024ம் ஆண்டிற்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு
புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.ஐ.ஆர்.எப்., 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.என்.ஐ.ஆர்.எப்., அமைப்பு, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.,12 மாலை வெளியிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த செயல்பாட்டுப் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 6வது ஆண்டாக இக்கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்து வருகிறது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி., 3வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி., 4ம் இடத்தையும் பிடித்துள்ளன.பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடத்தையும், டில்லி ஐ.ஐ.டி., 2வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி., 3வது இடத்தையும் பிடித்துள்ளன. மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை 2வது இடத்தையும் பிடித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டில்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்ததுள்ளது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்ததுள்ளன.