3டி முறையில் இரவிகுளம் தேசிய பூங்கா
மூணாறு: ராஜமலைக்குச் செல்லும் நுழைவு பகுதியான ஐந்தாம் மையில் அதி நவீன தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.மூணாறு அருகே உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றைக் காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவு பகுதியான ஐந்தாம் மைலில் டிக்கெட் பெற்ற பிறகு வனத்துறை வாகனங்களில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.புதிய வசதி: வரையாடுகளின் பிரசவத்திற்காக கடந்த பிப்ரவரி, மார்ச்சில் பூங்கா மூடப்பட்டபோது ஐந்தாம் மைலில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடந்தன. அதன்படி பார்வையாளர்கள் ஓய்வு அறை அமைக்கப்பட்டு, அதனுள் முற்றிலும் ஆன் லைன்' முறையில் டிக்கெட் பெறும் வகையில் டிக்கெட் வையிண்டிங் கியோஸ்கர் மிஷின் , க்யூ.ஆர். கோடு ஆகிய வசிதிகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் வெர்ச்சுரல் ரியால்ட்டி மையம், ஷெல்பி பாய்ண்ட், ஓட்டல் உள்பட பல்வேறு வசதிகள் ஒரே கட்டடத்தினுள் கொண்டு வரப்பட்டன.அவற்றில் வெர்ச்சுரல் ரியால்ட்டி எனும் 360 டிகிரியில் 3டி முறையில் இரவிகுளம் தேசிய பூங்காவை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.அந்த காட்சிகளை ஒரே நேரத்தில் 12 பேர் தனித்தனியாக மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வர்ணனையில் ரசிக்கலாம். 10 நிமிடம் ஆவணப்படம் போன்ற வெர்ச்சுரல் ரியால்ட்டியை ரசிக்க நபர் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம்.அதேபோல் நுழைவு டிக்கெட் பெற ஐந்து டிக்கெட் வையிண்டிங் கியோஸ்கர் மிஷின்கள், க்யூ. ஆர். கோடு ஆகிய வசதிகள் உள்ளதால் பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. தவிர வாகனங்களை நிறுத்த இடவசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஐந்தாம் மைலில் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு வாய்ப்பு இல்லை எனவும் புதிய வசதிகள் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதாகவும் வனத்துறை இயக்குனர் பிரமோத், மூணாறு வன உயிரின பாதுகாவலர் வினோத், உதவி பாதுகாவலர் நிதின் லால் ஆகியோர் தெரிவித்தனர்.