35 ஆண்டுகளுக்குப் பின் கூடி மகிழ்ந்த அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்
அமெரிக்கன் கல்லூரியில் 1971 - 74 ம் ஆண்டுகளில் பி.காம்., படித்த மாணவர்கள் நேற்று கல்லூரியில் ஒன்று கூடினர். மொத்தம் 80 பேரில் 8 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்களில் 42 பேர் நேற்று பங்கேற்றனர். அதில் 20 பேர் மனைவிகளுடன் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மதுரையை சேர்ந்த குப்புசாமி, மனோகரன், சோமு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து அகுபொன் என்பவர் வந்திருந்தார். மேலும் ஐதராபாத், பெங்களூரு, புதுச்சேரி என பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வந்தனர். அனைவரும் காலையில் கல்லூரிக்கு சென்றனர்.தாங்கள்படித்த வகுப்பறையை பார்த்து பழைய நினைவுக்கு சென்றனர்.தங்களுக்கு சட்டப் பயிற்சி அளிக்க வந்த வக்கீல் ஒருவரை ஒயிட் பிளஸ் என (சட்டை, பேன்ட், தலைமுடி) அழைத்தது உட்பட அப்போதைய ஆசிரியர்கள், மாணவர்களிடம் செய்த குறும்பு, மறக்க இயலாத சம்பவங்களை நினைவு கூர்ந்தனர்.அவர்களை கல்லூரி முதல்வர் சின்னராஜ் ஜோசப், பழைய மாணவர் சங்க இயக்குனர் ஜெயகர் வரவேற்றனர். அவர்களுக்கு மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினர். 2013ம் ஆண்டு மீண்டும் கூடி மகிழ்வது என தீர்மானித்தனர்.