37 லட்சம் மாணவர் சேர்க்கை குறைவு
முந்தைய ஆண்டை விட, 2023-24ல் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 37 லட்சம் குறைந்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் யு.டி.ஐ.எஸ்.இ.,+ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்வித் தரவை தொகுக்க கல்வி அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் தரவுத் திரட்டல் தளம் யு.டி.ஐ.எஸ்.இ.,+ எனும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு. இந்த அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி, 2022-23ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 25.17 கோடியாக இருந்த நிலையில், 2023-24ம் ஆண்டில் 24.80 கோடியாக உள்ளது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், மாணவிகளின் எண்ணிக்கை 16 லட்சமும், மாணவர்களின் எண்ணிக்கை 21 லட்சமும் குறைந்துள்ளது.உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் சதவீதம் மாணவர் சேர்க்கை சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால், தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்காளம், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில், பதிவுசெய்யப்பட்ட மாணவர்களுடன் ஒப்பிடும்போது, பள்ளிகளின் சதவீதம் கணிசமாகக் குறைவாக உள்ளது. இது, இத்தகைய மாநிலங்கள் உள்கட்டமைப்பை சிறப்பாக பயன்படுத்துவதைக் குறிப்பதாக யு.டி.ஐ.எஸ்.இ.,+ தெரிவித்துள்ளது.