545 எஸ்.ஐ., பதவிக்கு மறுதேர்வு கர்நாடக தேர்வு ஆணையம் தீவிரம்
பெங்களூரு: மாநிலத்தில் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்த, கர்நாடகா தேர்வுகள் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, 2021 நவம்பரில் தேர்வு நடந்தது. 2022 பிப்ரவரியில் தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்பின்னர் தேர்வில் முறைகேடு நடந்தது தெரிந்தது. பணம் கொடுத்து முறைகேடு செய்து, தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெற்றனர்.இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத் பால் உள்ளிட்ட, உயர் போலீஸ் அதிகாரிகள், முறைகேடு செய்த தேர்வர்கள், அரசியல் பிரமுகர்கள் என, 80 பேர் கைது செய்யப்பட்டனர்.அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ., அரசு, மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. இதை எதிர்த்து தேர்வர்கள் சிலர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அரசு உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் டிசம்பர் 23ல் எஸ்.ஐ., மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.பெங்களூரில் மட்டும்ஆனால், தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அவகாசம் வழங்கக் கோரியும், தேர்வை தள்ளி வைக்கும்படியும், பெலகாவியில் நடந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில், வடமாவட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ஜனவரி 23ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.இந்த தேர்வை நடத்தும் பொறுப்பை, கர்நாடகா தேர்வுகள் ஆணையத்திடம், அரசு ஒப்படைத்து உள்ளது. தேர்வுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில், தேர்வுக்கான ஏற்பாடுகளை, கர்நாடகா தேர்வுகள் ஆணையம், தீவிரமாக செய்து வருகிறது.இந்த முறை பெங்களூரில் மட்டுமே தேர்வுகள் நடக்கிறது. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 1:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரையும் தேர்வு நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.காலர் இல்லாத சட்டைஹால் டிக்கெட்டுடன், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகள் எடுத்து வர, தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தண்ணீர் பாட்டில்கள், மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.ஆண் தேர்வர்கள் முடிந்த வரை, காலர் இல்லாத சட்டை அணிந்து வரும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். ஜீன்ஸ் பேன்ட், பெல்ட், ஷூக்கள் அணிந்து வரவும், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.இதுபோல, பெண் தேர்வர்கள் முழு கை ஆடை அணிய, தடை விதிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு, தேர்வு மையங்களுக்கு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.