9 ஆண்டுகளாக பயன்படாத பள்ளி கட்டடம்: ரூ.10 லட்சம் வீணடிப்பு
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், செய்யாற்றின் கரையோரம் காவாந்தண்டலம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள, அரசு நடுநிலைப் பள்ளியில், கடந்த, 2003-04 ம் நிதியாண்டில், லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரு வகுப்பறைகள் கொண்ட, கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. தரமற்ற முறையில் கட்டடம் கட்டப்பட்டதால், கட்டுமான பணிகள் முடிந்த சில மாதங்களிலேயே, கட்டடத்தின் தரை உள் வாங்கியது. இதனை சீரமைக்க, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, புதிய வகுப்பறை கட்டடம் திறக்கப்படவில்லை. தற்போது, இக்கட்டடம் முழுவதும் சிதிலமடைந்து, பயன்பாடின்றி வீணடிக்கப்பட்டுள்ளது, இது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், "பள்ளியில் இடநெருக்கடி பிரச்னைக்கு தீர்வாக, கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டது. இதற்கு, அதிகாரிகள் முறையாக இடம் தேர்வு செய்யாமல், குப்பை மேடு அமைந்திருந்த இடத்தில் அதனை கட்டி விட்டனர். இதனால், அந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில், தரையில் விரிசல் ஏற்பட்டது. மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தில், அவர்களை கட்டடத்திற்குள் அனுமதிக்கவில்லை. தற்போது, கட்டடம் முழுவதும் சிதிலமடைந்து உள்ளது. இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.