உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 392 சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்: மதிப்பீடு தயாரிப்பு

392 சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்: மதிப்பீடு தயாரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் பொதுமக்கள் அறிந்த, அறிந்திடாத சுற்றுலா தலங்கள் என, 392 இடங்களை சுற்றுலா துறை தேர்வு செய்துள்ளது. அவற்றில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் பலதரப்பட்ட வளமான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது. இவற்றை கண்டு களிக்க வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இங்கு, 43,635க்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. மாநிலத்தில், 17 வன விலங்கு சரணாலயங்கள்; 5 தேசிய பூங்காக்கள்; 17 பறவைகள் சரணாலயங்கள்; மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதிகள்; 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன.நீலகிரி, மன்னார் வளைகுடா, அகஸ்தியர் மலை என, மூன்று உயிர்கோள காப்பகங்கள் உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களான மாமல்லபுரம் நினைவு சின்னங்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், அரியலுார் கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், நீலகிரி மலை ரயில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் போன்றவையும் தமிழகத்தில் உள்ளன.இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த, மக்கள் அதிகம் அறிந்திடாத சுற்றுலா தலங்களை கண்டறிந்து, அவற்றை பிரபலப்படுத்த, சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, மக்கள் அதிகம் அறிந்த, அறியாத சுற்றுலா தலங்கள் என, 392 இடங்களை பட்டியலிட்டுள்ளது. அவை, புத்த பாதை, ராமாயணம், கடற்கரை, காலனித்துவம், திவ்ய தேசம், அறுபடை வீடு, தனித்துவ தளங்கள், குகைகள் - கோட்டைகள், ஜெயின் பாரம்பரியம், மலைப்பகுதிகள், இயற்கை பாதை, நீர்வீழ்ச்சிகள்; கலாசார தளங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பகுதிகளில், சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுற்றுலா துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் சுற்றுலா பயணியரை கவர, மக்கள் அதிகம் அறிந்திடாத சுற்றுலா இடங்களை பிரபலப்படுத்த உள்ளோம். பிரபலமான பகுதிகளுக்கு, சுற்றுலா பயணியர் செல்லும் போது, அதன் அருகில் உள்ள அறிந்திடாத சுற்றுலா பகுதிகளுக்கு செல்லவும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.இதுவரை, 392 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதன் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். அவற்றில், மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன், சுற்றுலா பயணியருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kulandai kannan
செப் 16, 2024 21:01

ஏவ்....


ஆரூர் ரங்
செப் 16, 2024 18:24

அடுத்த பேக்கேஜ்?


கிஜன்
செப் 16, 2024 09:00

நல்ல செய்தி ... வாழ்த்துக்கள் .... நவகிரக சுற்றுலா 100% வெற்றி ....ஒவ்வொரு முறையும் புதன் பகவான் தரிசனத்தில் மட்டும் மூலவர் நடை சாற்றி விடுகிறார்கள்.... சரியான நேரத்தில் ஆகமவிதிப்படி செல்லவேண்டும் .. தற்போது வைஷ்ணவ தரிசன சுற்றுலாவும் அனைத்து மண்டலங்களிலும் நல்லவிதமாக நடக்கிறது .... காலை மதியம் உணவுகளும் தரமாக தருகிறார்கள் .... கோடை காலத்தில் குளிரூட்டப்பட்ட பேரூந்துகள் அதிகம் விடவேண்டும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை