உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி வாக்காளர்களுக்கு ஒரு சல்யூட் !

டில்லி வாக்காளர்களுக்கு ஒரு சல்யூட் !

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி சட்டசபை தேர்தல் முடிந்து, பா.ஜ., அறுதிப் பெரும்பான்மைக்கு மேலேயே இடங்களைப் பெற்றுவிட்டது. அக்கட்சிக்கு இது இனிப்பான செய்தி. டில்லியில், 27 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ., ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.டில்லி மக்களுக்கு ஆம் ஆத்மி மீதும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் ஏன் நம்பிக்கை போயிற்று? பா.ஜ., வை, அவர்கள் ஏன் நம்பத் துவங்கிஉள்ளனர்? காங்கிரஸ் ஏன் சோபிக்கவே இல்லை?

'கண்ணாடி மாளிகை'

முதல் விஷயம், அரவிந்த் கெஜ்ரிவாலின் இமேஜில் ஏற்பட்ட ஓட்டை. அன்னா ஹசாரேவோடு இணைந்து துாய்மை அரசியல் பேசி அரசியலுக்கு வந்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரி, கெஜ்ரிவால். வழக்கமாக அரசியல்வாதிகள் என்றாலே, கதர் ஜிப்பா, அல்லது நேரு கோட் போட்டுக்கொண்டு தான் இருப்பர். அந்த இமேஜை உடைத்து, சாதாரண அரைக்கை சட்டை, காலில் செருப்பு என்று அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அடித்தட்டு, மத்திய தர வர்க்கத்தினருடைய அடையாளமாக தன்னைக் காட்டிக்கொண்டார். அந்த இமேஜ்தான் அவரை இருமுறை டில்லி முதல்வர் ஆக்கியது. ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் இரண்டு பெரிய தவறுகளை அவர் செய்தார். முதல் தவறு, தன் வீட்டைப் புதுப்பித்தது. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் டைல்ஸ்களும், திரைச்சீலைகளும் இறக்குமதி செய்து தன் வீட்டை 'கண்ணாடி மாளிகை' போல் இழைத்துக்கொண்டார். கிட்டத்தட்ட 41 கோடி ரூபாய் செலவு. இந்த விஷயத்தை பா.ஜ., வும், காங்கிரசும் எடுத்துப் பேசி, மக்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். மக்கள் மத்தியில் இந்த ஆடம்பரம், ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது. இரண்டாவது பெரிய காரணம், டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு. இவ்வளவு பெரிய ஊழலை சத்தமே இல்லாமல் செய்ய முடியுமா என்ற கேள்விதான், இன்று கெஜ்ரிவாலுக்கு எதிரான ஓட்டுகளாக ஒன்று திரண்டுள்ளன. ஆம் ஆத்மியின் தோல்விக்கு இன்னொரு முக்கியமான காரணம், மும்முனைப் போட்டி. லோக்சபா தேர்தலின்போது, 'இண்டி' கூட்டணி சார்பாக, ஆம் ஆத்மியும், காங்கிரசும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தன. இந்த டில்லி சட்டசபை தேர்தலில், இருவருமே தனித்தனியாக நின்றனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, டில்லியின் 70 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

ஓட்டு சிதறடிப்பு

ஒவ்வொரு கட்சியும் தத்தமது ஓட்டு வங்கியை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், ஓட்டுகளை சிதற அடித்துவிட்டன. இந்த ஓட்டு சிதறடிப்பு தான் பா.ஜ.,வுக்கு சாதகமாக மாறிவிட்டது.கெஜ்ரிவால், டில்லியை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் முதலில் கவர்ச்சிகரமாகவும், புரட்சிகரமாகவும் இருந்தன. உதாரணமாக, 'மொஹல்லா கிளினிக்' என்ற சின்னச் சின்ன மருத்துவமனைகள், நாளடைவில் செயலற்றுப் போயின. டில்லி அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக்காட்ட வேண்டும் என்பதற்காக, அதற்கு முந்தைய வகுப்புகளிலேயே மாணவர்களை 'பெயில்' ஆக்குகின்றனர் என்ற விபரத்தை எதிர்க்கட்சிகள் வெளியே கொண்டுவந்தன. ஆம் ஆத்மி தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம், டில்லிவாழ் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி. அதாவது, டில்லியில் வாழ்பவர்களில் 67 சதவீதம் பேர் மத்திய அரசு பணியாளர்கள். பெரும்பாலும் குமாஸ்தாக்கள் என்று சொல்லப்படும் இடைநிலை ஊழியர்கள். தங்களிடம் இருந்து வரியை பறித்துக்கொண்டு, ஏழை எளியவர்களுக்கு அனாமத்தாக ஆம் ஆத்மி வாரி வழங்குவதாகவும் அவர்கள் கருதினர்.'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்பரே, அதுபோல் அதிரடியாக நடைபெற்ற இரண்டு விஷயங்கள் தான், டில்லி வாக்காளர்களின் மனதை மாற்றின. ஒன்று, எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இரண்டு, 12 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு என்று பட்ஜெட்டில் சொன்னது.

முக்கியமான கேள்வி

இரண்டுமே, டில்லிவாழ் மத்திய அரசு பணியாளர்களுக்கு அல்வா செய்திகள். மக்கள், பெருமளவு வெளியே வந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர். இதில், காங்கிரஸ் எங்கே போனது என்பதுதான் முக்கியமான கேள்வி.வெறும் 6.36 சதவீத ஓட்டுகளுடன், அது நடையைக் கட்டிவிட்டது. தாமதமானாலும், மக்கள் தீர்மானமாக ஓட்டு போடுகின்றனர். தங்களுக்கு யார் வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதில், அவர்களுக்கு இருக்கும் தெளிவுக்கு ஒரு சல்யூட்!

ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Iniyan
பிப் 09, 2025 15:42

தொடப்ப கட்ட கட்சி தேச விரோத ஹிந்து விரோதம் செயல்பாடே முதல் காரணம்


aaruthirumalai
பிப் 09, 2025 13:39

எளிமையானவர் என்ற போலி தோற்றம் தோல்விக்கு முக்கிய காரணம்


Anbuselvan
பிப் 09, 2025 11:20

பிஜேபியின் சரியான அணுகுமுரய், ஆப் மற்றும் காங்கிரெஸ் கூட்டணி வைத்து கொள்ளாமல் இருந்தது, கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார் ஆகியவை பிஜேபி கட்சிக்கு சாதகமாக அமைந்தது. 14 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் பிஜேபி வெற்றிபெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. கூட்டணி அமைத்து இருந்தால் அந்த கூட்டணி 36 சீட்டுகளை பெற்று ஆட்சியை பிடித்து இருக்க கூடும். காங்கிரஸ் மற்றும் ஆப் கூட்டணியை மக்கள் அப்படியே ஏற்று கொண்டு இருப்பார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இது சாத்தியம் ஆகியிருக்கும். இப்போது பிஜேபி நல்லாட்சியை தந்து டெல்லி மக்களை எப்படி கவனித்து கொள்வார்களோ அதை பொறுத்துதான் அவர்களின் டெல்லி எதிர்காலம் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை