உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., ஓட்டுகளை பெற ஜெ., படம்: தந்திர அரசியல் செய்வதாக பா.ம.க., மீது பாய்ச்சல்

அ.தி.மு.க., ஓட்டுகளை பெற ஜெ., படம்: தந்திர அரசியல் செய்வதாக பா.ம.க., மீது பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டுகளைப் பெற, பா.ம.க., தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., விக்கிரவாண்டியில், 23.19 சதவீதம் அதாவது 41,428 ஓட்டுகளை பெற்றது. ஆனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில், பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க.,வுக்கு 32,198 ஓட்டுகள்தான் கிடைத்தது. தொடர் தோல்விகளால், 2009ல் இருந்து பா.ம.க.,வால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை. எனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் குறைந்தது 60,000 ஓட்டுகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பா.ம.க., களம் இறங்கிஉள்ளது.அதற்காக வெளிப்படையாகவே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வன்னியர் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார். '10,000 பேர் உள்ள சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தை ஆள்கின்றனர். பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள், அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்' என, ராமதாஸ் கூறியுள்ளார். இதன் வாயிலாக, விக்கிரவாண்டி தொகுதியில் இருக்கும் ஒட்டுமொத்த வன்னியர்களின் ஓட்டுகளும் பா.ம.க.,வுக்கு கிடைக்கும் என, கணக்குப் போட்டே இப்படி பேசுகிறார். இதற்கிடையில், அ.தி.மு.க., போட்டியிடாததால், அக்கட்சியின் ஓட்டுகளைப் பெற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முயற்சித்து வருகிறார். அ.தி.மு.க., கூட்டணி கட்சியான தே.மு.தி.க., ஆதரவை கோரிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை கண்டித்து, அ.தி.மு.க., நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ம.க.,வோ, அ.தி.மு.க., ஓட்டுகளைப் பெற தீவிர முயற்சியில் களம் இறங்கி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அ.தி.மு.க., கிளை செயலர்கள், அதற்கும் கீழ் இருக்கும் நிர்வாகிகள் வரை அனைவரையும், பா.ம.க.,வினர் சந்தித்து தங்களுக்கு ஓட்டளிக்க கேட்டு வருகின்றனர். அ.தி.மு.க., கிளைச் செயலர் வரையுள்ள நிர்வாகிகளின் மொபைல் போன் எண்களின் பட்டியலை, அன்புமணியிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் அன்புமணி பேசி, இந்த தேர்தலில் பா.ம.க.,வுக்கு ஓட்டளிக்க வலியுறுத்தி வருவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், விக்கிரவாண்டி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் இருக்கும் அன்புமணிக்காக வைக்கப்படும் பிளக்ஸ் பேனரில், பிரதமர் மோடி, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும் போட்டுள்ளனர். ஜெயலலிதாவை முக்கியத்துவப்படுத்துவதன் வாயிலாக அ.தி.மு.க., ஓட்டுகளை சுளையாக அள்ளலாம் என்பதே பா.ம.க.,வின் திட்டம். இது பா.ம.க.,வின் தந்திர அரசியல் என அ.தி.மு.க., தரப்பு விமர்சிக்கிறது. 'இதனால், அ.தி.மு.க.,வினர் ஏமாந்து போய், பா.ம.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்' என்று அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூலை 03, 2024 21:16

அன்புமணி ராமதாஸ் சேர்ந்த சேர்க்கை சரியில்லை என்றால் இப்படித்தான் ஆகும்!


பேசும் தமிழன்
ஜூலை 03, 2024 20:00

அப்போ யாருக்கு ஓட்டு போடுவார்கள்... காசை வாங்கி கொண்டு பங்காளி கட்சி திமுகவுக்கு ஆதரவு ஓட்டு போடுவார்களா ??? அதை தான் நீங்களும் விரும்புகிறீர்களா ???


அரசு
ஜூலை 03, 2024 08:06

ஜாதியையும், மதத்தையும் வைத்து கட்சி நடத்தும் ஆட்களை மக்கள் அறவே புறக்கணிக்க வேண்டும்.


மங்கள் தூபே
ஜூலை 03, 2024 07:59

பக்கத்தில் இருக்கிற படத்தைப் பாத்தால் இருக்கிற ஓட்டும் போயிரும்.


பேசும் தமிழன்
ஜூலை 03, 2024 20:02

நாடாளுமன்ற தேர்தலில்... எத்தனை லட்சம் ஓட்டு வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியுமா ???


மேலும் செய்திகள்











புதிய வீடியோ