ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 50,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது.நேற்று மாலை கபினியில் வினாடிக்கு, 61,316 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 2,566 கன அடி நீர் என மொத்தம், 63,882 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நேற்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு, 50,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நான்காவது நாளாக காவிரியாற்றில், குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.நீர்மட்டம் கிடுகிடு உயர்வுமேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 3ல் அணை நீர்மட்டம், 39.65 அடி, நீர் இருப்பு, 11.91 டி.எம்.சி.,யாக இருந்தது. கபினி அணையில் திறக்கப்படும் உபரிநீர், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று நீர் மட்டம் 57 அடியாகவும், நீர் இருப்பு 17.83 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.-நமது நிருபர் குழு-