உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது!: தியான அனுபவம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது!: தியான அனுபவம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், சமீபத்தில் பிரதமர் மோடி மூன்று நாட்கள் தியானம் செய்தார். தியானத்தை முடித்து, விமானத்தில் டில்லிக்கு புறப்பட்ட போது, தியானம் மற்றும் கன்னியாகுமரி பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதியுள்ளார். அதில், பிரதமர் கூறியுள்ளதாவது:ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான, 2024 லோக்சபா தேர்தல், ஜனநாயகத்தின் தாயாகத் திகழும் நம் தேசத்தில் நிறைவடைந்துள்ளது. கன்னியாகுமரியில் மூன்று நாள் ஆன்மிக பயணத்தை முடித்து, டில்லிக்கு விமானம் ஏறினேன்.என் மனம் பல அனுபவங்களாலும், உணர்ச்சிகளாலும் நிரம்பியுள்ளது. எனக்குள் எல்லையற்ற சக்தியின் பிரவாகத்தை உணர்கிறேன். 2024 லோக்சபா தேர்தல், அமிர்த காலத்தின் முதல் தேர்தலாகும். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திர போர் நடந்த இடமான மீரட்டிலிருந்து, சில மாதங்களுக்கு முன் பிரசாரத்தைத் துவக்கினேன்.

தேர்தல் உற்சாகம்

அப்போதிருந்து, நான் நம் மாபெரும் தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்துள்ளேன். இந்த தேர்தல்களின் இறுதிப் பேரணி என்னை பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூருக்கு அழைத்துச் சென்றது. பஞ்சாப் மாபெரும் குருக்களின் பூமியும், துறவி ரவிதாசுடன் தொடர்புடைய பூமியாகும். அதன்பின், கன்னியாகுமரிக்கு அன்னை பாரதத்தின் காலடியில் வந்து நின்றேன்.தேர்தல் உற்சாகம் என் இதயத்திலும், மனதிலும் எதிரொலித்தது இயல்பானதே. பேரணிகளிலும், சாலை வாகன பேரணிகளிலும் பார்த்த முகங்கள், என் கண் முன்னே வந்தன. நம் பெண் சக்தியின் ஆசிர்வாதம், நம்பிக்கை, பாசம், இவை அனைத்தும் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தன.என் கண்கள் ஈரமாகிக் கொண்டிருந்தன. நான் ஒரு தியான நிலைக்குள் நுழைந்தேன். ஒருபுறம், சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள், ஒரு தேர்தலுக்கே உரித்தான குற்றச்சாட்டுகளின் குரல்கள், வார்த்தைகள்... அவை அனைத்தும், ஒரு வெற்றிடத்தில் மறைந்தன. எனக்குள் ஒரு பற்றற்ற உணர்வு வளர்ந்தது... என் மனம் புற உலகிலிருந்து முற்றிலும் விலகியது.இத்தகைய பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில், தியானம் சவாலானதாக மாறுகிறது. ஆனால், கன்னியாகுமரி மண் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் அதை சிரமமற்றதாக மாற்றியது. நானே ஒரு வேட்பாளராக, என் பிரசாரத்தை என் அன்புக்குரிய காசி மக்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு வந்தேன்.பிறந்ததிலிருந்தே நான் போற்றி வளர்த்து வாழ முயன்ற, இந்த விழுமியங்களை எனக்கு ஊட்டியதற்காக கடவுளுக்கும், நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த போது, என்ன அனுபவித்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என் தியானத்தின் ஒரு பகுதி இதே போன்ற எண்ண ஓட்டத்தில் கழிந்தது.இந்த பற்றற்ற நிலை, அமைதி மற்றும் மவுனத்துக்கு மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தையும், குறிக்கோள்களையும் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது.

புதிய உயரம் தந்தது

கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன், என் எண்ணங்களுக்கு புதிய உயரங்களைக் கொடுத்தது. கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. அடிவானத்தின் விரிவு, தொடர்ந்து பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள ஒற்றுமையை எனக்கு உணர்த்தியது. பல தசாப்தங்களுக்கு முன், இமயமலையின் மடியில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளும், அனுபவங்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது போல தோன்றியது.கன்னியாகுமரி எப்போதும், என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம், ஏக்நாத் ரானடே அவர்களின் தலைமையில் கட்டப்பட்டது. ஏக்நாத் உடன் விரிவாக பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மணிமண்டபம் கட்டப்பட்டபோது, கன்னியாகுமரியிலும் சில காலம் செலவிடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும், ஆழமாக வேரூன்றிய ஒரு பொது அடையாளமாகும். அன்னை சக்தி கன்னியாகுமரியாக அவதரித்த, 'சக்தி பீடம்' இது. இந்த தென்கோடியில், அன்னை சக்தி தவம் செய்து, பாரதத்தின் வடக்கு பகுதியில், இமயமலையில் உறையும் பகவான் சிவபெருமானுக்காகக் காத்திருந்தார்.கன்னியாகுமரி சங்கமிக்கும் பூமி. நம் தேசத்தின் புனித நதிகள் பல்வேறு கடல்களில் கலக்கின்றன, இங்கோ கடல்கள் சங்கமமாகின்றன. பாரதத்தின் சித்தாந்த சங்கமம் என்ற மற்றொரு மாபெரும் சங்கமத்தை இங்கே நாம் காண்கிறோம்.

பெரும் உத்வேகம்

இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகியவை உள்ளன. இந்த ஜாம்பவான்களின் சிந்தனை நீரோட்டங்கள் இங்கு சங்கமித்து, தேசிய சிந்தனையின் சங்கமத்தை உருவாக்குகின்றன. இது, தேச நிர்மாணத்திற்கு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது. கன்னியாகுமரி மண், குறிப்பாக பாரதத்தின் தேசியம் மற்றும் ஒற்றுமை உணர்வின் மீது சந்தேகம் உடைய, எந்தவொரு நபருக்கும், ஒற்றுமையின் அழிக்க முடியாத செய்தியை தெரிவிக்கிறது.கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் பிரமாண்டமான சிலை, கடலில் இருந்து பாரத அன்னையின் அகன்று விரிந்துள்ள நிலத்தை பார்ப்பது போல உள்ளது. திருக்குறள் தமிழ் மொழியின் மணி மகுடங்களில் ஒன்று. இது, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியது. நமக்கும், தேசத்திற்கும் சிறந்ததை வழங்க நம்மை ஊக்குவிக்கிறது. அத்தகைய பெரும் புலவருக்கு என் மரியாதையைச் செலுத்தியது என் மிகப்பெரிய பாக்கியமாகும். 'ஒவ்வொரு தேசத்துக்கும், வழங்குவதற்கு ஒரு செய்தியும், நிறைவேற்றுவதற்கு ஒரு பணியும், அடைவதற்கு ஒரு இலக்கும் உள்ளன' என்று சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பாரதம் இந்த அர்த்தமுள்ள நோக்கத்துடன் முன்னேறி வந்துள்ளது. பாரதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்தனைகளின் தொட்டிலாக இருந்து வருகிறது. நாம் ஈட்டிய செல்வத்தை நம் தனிப்பட்ட செல்வமாக, நாம் ஒருபோதும் கருதுவதில்லை அல்லது அதை முற்றிலும் பொருளாதார ரீதியிலோ அல்லது பொருட்கள் என்னும் அளவுகோல்களாலோ அளவிட்டதில்லை. இது, என்னுடையது அல்ல என்பதே பாரதத்தின் உள்ளார்ந்த மற்றும் இயல்பான தன்மையின் பகுதியாக மாறிவிட்டது.நாட்டின் வளர்ச்சி பயணம், நமக்கு பெருமிதம் மற்றும் புகழை சேர்த்துள்ளது. 2047க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வேண்டிய கடமை, 140 கோடி மக்களுக்கும் உள்ளது. இப்போது ஒரு வினாடியை கூட வீணடிக்காமல் பெரும் கடமைகள் மற்றும் பெரிய இலக்குகளை நோக்கி முன்னேறி வருகிறோம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், லட்சிய பாரதத்தை உருவாக்குவதற்கான இலக்கு வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Saravanakumar 1995
ஜூன் 07, 2024 09:49

இந்த கட்டுரை ஒரு உணர்வு பூர்வமாக உள்ளது.. சரியான முன்னேற்ற பாதை செல்லும் ஒரு தெளிவு பிறக்கிறது.. செய்ய வேண்டிய பணிகள் வரிசை படுத்தபடுவது உணர்கிறது.. நாட்டின் முன்னேற்றம் சிறப்பாக இருந்து வந்தது இருக்கின்றது இருக்கவும் போகின்றது...


வெள்ளிமலை
ஜூன் 04, 2024 21:58

தியான பகன் கைமேல் கிடைச்சிடிச்சு குமாரு.


JEEVAKUMAR RADHAKRISHNAN
ஜூன் 04, 2024 07:55

அருமையான பதிவு ஒரு தெளிந்த மற்றும் பற்றற்ற யோகியின் வாக்கியங்கள் வாழ்க பாரதம்


குமரி
ஜூன் 04, 2024 07:52

நீயும் நானும் போய் மூணு நாள் அங்கே உக்கார முடியுமா? மக்ஜளை அடுச்சு முடக்கி இவுரு தியானம் செய்வாராம். ஒண்ணாந்தர அதிகார துஷ்பிரயோகம்.


முருகன்
ஜூன் 04, 2024 07:01

ஒடிசாவில் பேசியதை அவ்வளவு சீக்கிரம் மறப்பதற்கு இது என்ன வட மாநிலமா


Sivakumar
ஜூன் 04, 2024 02:02

Really Mr Modi is respected in awe by millions. May you continue to lead this great nation Bharat as elected Prime Minister for 3rd term as well.


Subramanian
ஜூன் 04, 2024 06:58

Very true.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை