உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணிக்கு வேட்டு வைக்கும் கார்த்தி: நடவடிக்கை எடுக்க போர்க்கொடி

கூட்டணிக்கு வேட்டு வைக்கும் கார்த்தி: நடவடிக்கை எடுக்க போர்க்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று பேசிய, கார்த்தி சிதம்பரம் எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான இளங்கோவன், அழகிரி ஆதரவாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், கார்த்தி சிதம்பரம் பேசுகையில், 'கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எந்த பிரச்னையையும், நாம் சுட்டிக்காட்டாமல் இருக்கக் கூடாது. அரசு செய்யும் தவறுகளை, மக்கள் பிரச்னைகளை, நாம் கட்டாயம் பேச வேண்டும்' என்றார்.அவருக்கு பதிலடி தரும் வகையில், முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறுகையில், 'தி.மு.க., கூட்டணி இல்லை என்றால் காங்கிரசுக்கு, 'டிபாசிட்' கிடைத்திருக்காது. 'கார்த்தி சிதம்பரம் எம்.பி.,யாகி விட்டார். உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் வெற்றி பெற வேண்டாமா; இதை மனதில் வைத்து அவர் பேச வேண்டும். கார்த்தியின் பேச்சு, தமிழக காங்கிரசுக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளது' என்றார்.இந்நிலையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரியின் ஆதரவாளரும், துணை தலைவருமான பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:லோக்சபா தேர்தலில், ஒன்பது தொகுதிகளை தி.மு.க., வழங்கிய போது, கூடுதலாக தாருங்கள் என, கார்த்தி சிதம்பரம் ஏன் வலியுறுத்தவில்லை. திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலையில், குற்றவாளிகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை என, முதல்வரை சந்தித்து கேட்டிருக்கலாமே.ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் அண்ணாமலை கேட்க வேண்டிய கேள்விகளை, கார்த்தி கேட்பதில் தனிப்பட்ட லாபம் என்ன?காமராஜர் ஆட்சி அமைப்போம் என ஒரு வார்த்தை பேசிவிட்டு, கூட்டணி கட்சியை விமர்சித்து விட்டு, மேடையை விட்டு இறங்கி விட்டால், காமராஜர் ஆட்சி அமைந்து விடுமா? அல்லது காங்கிரஸ் தான் வளர்ந்து விடுமா? தி.மு.க., கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசி வரும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இளங்கோவனின் ஆதரவாளரான மயிலை அசோக்குமார் கூறுகையில், “நாம் தனித்து நிற்கிறோமா, கூட்டணியில் நிற்கிறோமா என்பதை விட, நம் வலிமை என்ன என்பதை உணர வேண்டும். இளங்கோவனை இழிவாக பேசுவதை, கார்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
ஜூலை 29, 2024 18:56

எதற்க்கு தனியாக கட்சி நடத்தி கொண்டு ....பேசாமல் கான் கிராஸ் கட்சியை கலைத்து விட்டு....திமுகவில் ஐக்கியமாகி விட வேண்டியது தானே ???


அசோகன்
ஜூலை 29, 2024 18:35

காங்கிரஸ் ஒரு தகர டப்பா என்று அவர்களே ஒத்துக்கொண்டர்கள் ???


siva
ஜூலை 29, 2024 16:28

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தோ அல்லது அதன் தலைமையில் கூட்டணி அமைத்தோ போட்டியிட்டிருந்தால் குறைந்தது 20+ தொகுதிகளில் வென்றிருக்கும், காங்கிரசு கூட்டணி, பாஐக கூட்டணி, திமுக, அதிமுக என்ற நான்கு முனைப்போட்டியில் காங்கிரசு பல தொகுதிகளை வென்றிருக்கலாம், கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டார்கள். 40 வெற்றி மக்கள் ராகுலுக்கும் காங்கிரசுக்கும் ஆதரவாக பாஐக மேலிருந்த வெறுப்பு வாக்குகள் என்பதை காங்கிரசு அறுவடை செய்யத் தவறிவிட்டது.


Swaminathan L
ஜூலை 29, 2024 15:15

நாக்கை இழந்த பின் நாலு நாள் பாட்டுக் கச்சேரி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதோ, முனைவதோ யதார்த்தத்திற்கு எதிரானது. வேண்டாத விளைவுகளை மட்டுமே உண்டாக்கும். தமிழகத்தில், காங்கிரஸ் தன் தனித்தன்மையை இழந்து பல பத்தாண்டுகள் ஆகி விட்டது. இன்றைய தமிழக மக்கள் அதை உயீரூட்டமுள்ள, உருப்படியான கட்சியாக, தனித்து நின்றால் பெருவாரியாக ஆதரிக்கும் அளவுக்கு லாயக்கான கட்சியாகப் பார்க்கவில்லை. திமுகவின் துணையோடு தான் காங்கிரஸ் இங்கே கோமாவில் படுக்காமல் ஏதோ கொஞ்சம் நடமாடிக் கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளிடம் ஓ, மக்களிடம் ஓ எதையும் திண்மையுடன் கேட்டுப் பெறும் நிலையில் தமிழக காங்கிரஸ் இல்லை.


Ramesh Sargam
ஜூலை 29, 2024 13:25

திமுக, காங்கிரஸ் இந்த கட்சிகளில் யாரும் யோக்கியதை அற்றவர்கள். வேண்டுமென்றால் கூடி குலாவுவதும், வேண்டாமென்றால் அடித்துப்புரள்வதும் அவர்களின் வாடிக்கை. மிகவும் வேடிக்கை...


RAAJ68
ஜூலை 29, 2024 05:20

இளங்கோவன் தலைவராக இருந்த காலத்தில் எப்படி எல்லாம் கருணாநிதியை கழுவி ஊற்றியுள்ளார் என்பதை நோண்டி எடுங்கள். அவரும் ஒரு காலத்தில் திமுகவுடன் கூட்டணியை முடித்துக்கொண்ட வரலாறு உண்டு.


PREM KUMAR K R
ஜூலை 29, 2024 05:10

கார்த்தி சிதம்பரம் கூறிய தி.மு.க. அரசின் எதிர்ப்பு கருத்திற்கு இளங்கோவன் போன்றோர் நேரடியாக பதில் கூறாதது மட்டுமல்ல - தமிழகத்தில் தி.மு.க. ஆதரவில்லை என்றால் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைத்திருக்காது என தொடங்கி, கட்சியே தமிழகத்தில் இருக்க முடியாது என கூறும் அளவிற்கு சென்று விட்டார்கள். இதைவிட ஒரு அவமானம் புதிதாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு வர வாய்ப்பில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை