உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சர்க்கரை நோய்க்கு பலாக்கொட்டையில் மருந்து

சர்க்கரை நோய்க்கு பலாக்கொட்டையில் மருந்து

சென்னை:பலாக்கொட்டையில் இருந்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கும் ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மண்வளத்தை பாதுகாத்தல், பூச்சிநோய் தாக்குதலை தடுத்தல், அதிக மகசூல் பெறுதல், அறுவடைக்கு பிந்தைய இழப்பை குறைத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த, படிப் படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் அபூர்வா, தமிழக வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் பல்கலை வல்லுனர் குழுவினர், சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று பல இடங்களில் ஆய்வு செய்தனர். ஆஸ்திரேலியாவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அரசுக்கு பரிந்துரையும் செய்துள்ளனர்.இக்குழுவில் இடம்பெற்ற வேளாண் வல்லுனர் ஒருவர் கூறியதாவது:கடலுார், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலாப்பழங்கள் அதிகஅளவில் விளைகின்றன. பலாக்கொட்டையில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. பலாக்கொட்டையை மதிப்பு கூட்டும் பொருட்களாக தயாரிக்கும் தொழில்நுட்பம், ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுகிறது. கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சர்க்கரை நோய்க்கு மருந்தாக, அங்கு பயன்படுத்தப்படுகிறது.பலாக்கொட்டையில் புரதச்சத்து நிரம்பி உள்ளதால், கோதுமை மாவு, சத்து மாவு உள்ளிட்ட பொருட்களில், அது கலந்து விற்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை தமிழகத்தில் பயன்படுத்தினால், இங்குள்ள பலா விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். ஆஸ்திரேலியாவில், 60 ஏக்கர் வரையிலான பழத்தோட்டங்களை, இரண்டு, மூன்று பேர் மட்டுமே எளிதாக பராமரிக்கின்றனர். நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, பழங்களை நாள்தோறும் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருமானம் பெறுகின்றனர். பசுமை குடில்களில் மனிதர்களுக்கு பதிலாக, 'ரோபோ'க்களை பயன்படுத்தி, சாகுபடி முதல் அறுவடை வரையிலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதுபோன்று நவீன தொழில்நுட்பங்களை, தமிழகத்தில் பயன்படுத்தினால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கும். எனவே, இவற்றை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவை போன்று, தமிழகத்தில் இயந்திரமயமாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு, அமைச்சர் மற்றும் செயலர் ஆர்வமாக உள்ளனர். இத்திட்டத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி