'பிரதமர் மோடி, கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறையில், மூன்று நாட்கள் தியானம் மேற்கொள்வது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.அதேநேரத்தில், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க., தலைமை சார்பில், எந்த மனுவும் அனுப்பப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், தி.மு.க., வழக்கறிஞர் ஒருவர் அளித்த மனுவில், 'பிரதமரின் தியானத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. 'தலைமை அனுமதியின்றி எப்படி மனு தரலாம்' என, அந்த வழக்கறிஞரை, தி.மு.க., தலைமை கண்டித்துள்ளது.இது தொடர்பாக, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:தி.மு.க., தலைமையில் இருந்து, தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு புகார் மனுவும் அளிக்கவில்லை. கன்னியாகுமரியில் உள்ள சமூக, தொண்டு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு அளித்தபோது, அதில் தி.மு.க., வழக்கறிஞரும் பங்கேற்றுள்ளார்.தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க வேண்டும் என்றால், நான் கொடுத்திருப்பேன். தேர்தல் ஆணையம் தரப்பில், 'தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால், எதற்கு தடை கேட்கிறீர்கள்' என, கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளது. அதனால் தான் கொடுக்கவில்லை.காங்கிரஸ் மனு கொடுத்துள்ளது. இறுதிகட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பிரதமர் மோடி தியானம் செய்தாலும், குடும்பமே நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை. இது விதிமீறலா, இல்லையா என்பது பற்றி, தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தி.மு.க.,வின் இந்த திடீர் முடிவு குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் கேட்டபோது, 'ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால், இப்போதைய எதிர்ப்பு தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், தி.மு.க., தரப்பு மோடியின் தியானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். அக்கட்சியைப் பொறுத்தவரை, சட்டசபை தேர்தல் தான் முக்கியம். அதுவரை ஆட்சி நடத்துவதற்கு தேவையான நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும் என்பதால், இப்போதைக்கு அமைதி காப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டது.- நமது நிருபர் -