கோவையில் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து காங்., எம்.பி., ராகுல், பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 'கோவையில் காங்., கட்சி, தனியாக பொதுக்கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ராகுல் 'மாஸ்' காண்பித்திருக்க வேண்டும்' என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.காங்., கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பத்தாண்டுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் நோக்குடன் 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை போட்டியிடுவதால், கோவையும், மத்திய இணை அமைச்சர் முருகன் போட்டியிடுவதால் நீலகிரிக்கும் பா.ஜ., முக்கியத்துவம் தருகிறது.தேர்தல் அறிவிப்பதற்கு முன் மற்றும் பின், என, எட்டு முறை பிரதமர் மோடி தமிழகம் வந்து விட்டார். தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன் மீண்டும் வர உள்ளார். ஆனால், கோவைக்கு ஒரே ஒருமுறை தான் ராகுல் தற்போது வந்துள்ளார்.'இண்டியா' கூட்டணி பொதுக்கூட்டம் என்று நடத்தியுள்ளனர். காங்., கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். வடமாநிலங்களில் நடத்துவது போல், ராகுல் மக்களை சந்திப்பது, சாலையில் நடப்பது, பொதுக்கூட்டத்தில் தனியே ராகுல் பேசுவது போன்று, 'மாஸ்' காண்பித்திருக்க வேண்டும். அதை விடுத்து வழக்கமாக கட்சி பொதுக்கூட்டம் போல் முடிக்கப்பட்டு விட்டது, கவலையளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கை கழுவும் பெருந்தலைகள்
இது ஒரு புறமிருக்க,' ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால், குறைந்தபட்சம், ஆறு முதல், எட்டு கோடி ரூபாய் வரை செலவிட வேண்டும். இத்தொகையை செலவிட, ஸ்பான்சர் செய்ய இப்போதைக்கு கட்சியின் 'பெருந்தலைகள்' கூட முன்வருவதில்லை. நம்மை விட்டால் போதும் என நகர்ந்து செல்பவர்களாக உள்ளனர். இதுவும் ராகுல் 'சிங்கிளா மாஸ் காட்ட முடியாததற்கு காரணம்' என்கின்றன கட்சி வட்டாரங்கள்.