உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓட்டு கேட்டு வரவே தயக்கம்; வார்டுக்குள் வராத கவுன்சிலர்கள்!

ஓட்டு கேட்டு வரவே தயக்கம்; வார்டுக்குள் வராத கவுன்சிலர்கள்!

பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், வாக்காளர்களைச் சந்திப்பதற்கு பயந்து, கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் வார்டுக்குள் ஓட்டுக்கேட்டு வரவேயில்லை.கோவை மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளில், தி.மு.க., கவுன்சிலர்கள் 76 பேர், காங்கிரஸ் - 9, மா.கம்யூ., - இ.கம்யூ., தலா - 4, ம.தி.மு.க., - 3 என மொத்தம் 97 பேர், ஆளும்கட்சி கூட்டணி கவுன்சிலர்களாகவுள்ளனர். தி.மு.க.,கவுன்சிலர்களில் மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள் ஐந்து பேர் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் என 15க்கும் மேற்பட்டோர், முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.இவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆளும்கட்சி கவுன்சிலர்களைத் தவிர, மற்றவர்கள் யாருமே, லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு, வார்டுக்குள் எட்டிப் பார்க்கவேயில்லை. அதேபோல, வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பகுதிக்கழகச் செயலாளர்கள் என கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளும் வீடு வீடாக ஓட்டுக்கேட்டு வரவேயில்லை.

அதிருப்தியால் 'ஆப்சென்ட்'

இதற்கு, பெரும்பாலான வார்டுகளில் மாநகராட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியே காரணமாகும். கடந்த சில மாதங்களாக, எந்த வார்டிலுமே குப்பை சேகரிக்கும் பணி முறையாக நடப்பதில்லை. குப்பைத் தொட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்ட நிலையில், ரோடுகளில் பல இடங்களில் குப்பைகள் மலை போலக் குவிந்துள்ளன.அதேபோல, பல வார்டுகளில் மாதமிரு முறை மட்டுமே, குடிநீர் விநியோகம் நடக்கிறது. பாதாள சாக்கடைப் பணிகள் பல வார்டுகளில் நடக்கவில்லை. ஏற்கனவே நடந்துள்ள பல இடங்களில் ரோடுகள் போடப்படவில்லை; போட்ட ரோடுகளும் தரமாக இல்லை; வீடுகளை விட, ரோடுகளின் உயரம் அதிகமாகி இருக்கிறது. இதனால், ஆளும்கட்சி கவுன்சிலர்கள் பலரும் வார்டுக்குள் ஓட்டுக்கேட்டு வரவேயில்லை.தேர்தல் முடிவுக்குப் பின்பாவது, கவுன்சிலர்கள் வார்டுகளுக்குள் வலம் வருவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கூட்டத்தோடு கூட்டமாக...

ஓட்டு கேட்டு வந்தால் மக்களிடம் எதிர்ப்பு எழும்; கேள்வி கேட்பார்கள்; ஏதாவது உத்தரவாதம் தர வேண்டும்; அதன்பின் அதை நிறைவேற்ற முடியாது என்பதால், மக்களைச் சந்திக்காமலே, ரோடுகளில் வாகனங்களில் சென்றும், கூட்டத்தோடு கூட்டமாக நடந்தும் பிரசாரம் செய்துள்ளனர். கவுன்சிலர்களே வராததால், கட்சி நிர்வாகிகளும் கட்சி சார்பில் பூத் சிலிப் கொடுப்பதற்கும் கூட, வார்டுகளுக்குள் வரவில்லை.அடுத்து சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான், ஓட்டுக்கேட்டு வர வேண்டும் என்பதால் இப்போதைக்கு 'எஸ்கேப்' ஆகி விட்டனர். இது, கோவை நகரின் பல பகுதிகளிலும் உள்ள மக்களிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ