பாலக்காடு;வனத்தின் நடுவில், ஒரு நாள் தங்க விரும்புவோர், இனி பாலக்காடு அருகே உள்ள தோணிக்கு வரலாம். தோணி கவரக்குன்று பங்களா சுற்றுலா பயணியருக்காக வனத்துறையால் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே காலனி அருகே தோணி பகுதி உள்ளது. வன பகுதியான இங்குள்ள கவரக்குன்னு என்ற இடத்தில், 1925ல் ஆங்கிலேயர் கட்டிய பிரம்மாண்ட பங்களா உள்ளது.பாழடைந்த இந்த பங்களாவை, தற்போது சுற்றுச்சூழல் சுற்றுலாவின் ஒரு பகுதியாக வனத்துறை புனரமைத்து, சுற்றுலா பயணியருக்காக திறந்துள்ளது.இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கவரக்குன்னு பங்களா 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பங்களாவில் இரண்டு அறைகள், உணவு அறை, வரவேற்பு அறை, சமையலறை, கழிவறை வசதிகள் உள்ளன.-இந்தியா பாணியில் ஆங்கிலேயர் கட்டியுள்ள இந்த பங்களாவின் கதவுகளும் ஜன்னல்களும் தேக்கு மரத்தில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூரிய சக்தி மின் வசதியும் உள்ளது.வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, பங்களாவை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியருக்காக தோணி முதல் கவரக்குன்னு வரையிலான டிரக்கிங், தோணி நீர்வீழ்ச்சி, பாண்டன்கல்லு டிரக்கிங், பறவைகள் கண்காணிப்பு உள்ளிட்ட தொகுப்பு வனத்துறையால் வழங்கப்படுகிறது.உணவு உட்பட, பங்களாவில் ஒரு நாள் தங்குவதற்கு இருவருக்கு, ரூ.7,000 கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. கூடுதல் படுக்கை ஒன்றுக்கு ரூ. 2,000 செலுத்த வேண்டும். புதுப்பரியாரம் ஊராட்சிக்குட்பட்ட முல்லக்கரை பழங்குடியின வன பாதுகாப்பு குழுவிற்கு இந்த பங்களாவின் மேற்பார்வை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பாலக்காடு நகரில் இருந்து, தோணிக்கு 15 கி.மீ., தூரம் மட்டுமே உள்ளது. இந்த பங்களாவில் தங்குவதற்கு, 85476 02073, 85476 02072 ஆகிய மொபைல்போன் எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.