'இந்திய ரயில்களை கவிழ்க்க வேண்டும்; ரயில்வே துறையின் கட்டமைப்புகளை முழுமையாக சிதைக்க வேண்டும்; அது தான் தற்போதைக்கு நம் ஒரே இலக்காக இருக்க வேண்டும்' என, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாதி பரஹத்துல்லாஹ் கோரியின் வீடியோ பேச்சு, இந்திய உளவுத்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மீதான தாக்குதல்
ஹைதராபாத்தை சேர்ந்தவராக அறியப்படும் பரஹத்துல்லாஹ் கோரியின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து, இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் நன்கு அறிந்ததுதான்.என்றாலும், வீடியோ வெளியிட்டு, தன் ஆதரவாளர்களை பகிரங்கமாக துாண்டிவிடுவது புதிது என்பதால், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் கோரியை எப்படி கைது செய்வது என்ற தீவிர ஆலோசனையில், உளவுத்துறை வட்டாரங்கள் களம் இறங்கியுள்ளன. இதுகுறித்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வெகு காலமாகவே இந்தியாவை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, பயங்கரவாதி கோரி, ஐ.எஸ்.ஐ., இயக்கத்தில் இணைந்து பணியாற்ற துவங்கினார். மற்ற பயங்கரவாதிகளை போல இவரை எடுத்துக் கொள்ள முடியாது; அதி பயங்கரமான செயல்களை துளியும் இரக்கம் இன்றி செய்பவர். கடந்த 2002ல் குஜராத்தின் காந்தி நகர் அக் ஷர்தாம் கோவில் மீதான தாக்குதல்; 2005ல் ஹைதராபாத்தில் உள்ள டாஸ்க்போர்ஸ் அலுவலகத்தில் நடந்த கொடிய தற்கொலை குண்டுவெடிப்பு மட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன் பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களின் பின்னணியில், கோரி உள்ளார்.இந்தியாவில் செயல்படும் ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்கள் திரட்ட ஆலோசனை சொல்வதில் துவங்கி, அவர்களை வைத்து பயங்கரவாத செயல்களை செய்ய வைப்பது வரை, கோரியின் செயல்பாடுகள் திகிலுாட்டக் கூடியவை. இந்தியாவின் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட அமைப்புகளால், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக நினைக்கும் கோரி, அதற்காக, அந்த அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளை பழிவாங்க, ஆதரவாளர்களை துாண்டி விட்டுள்ளார். குக்கர் வெடிகுண்டு எப்படி தயாரிப்பது, வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்கள் வாயிலாக ரயிலையே கவிழ்க்கக கூடிய அளவுகான வெடிகுண்டு தயார் செய்வது எப்படி என்பது குறித்து, மிக எளிமையாக சொல்லிக் கொடுப்பதில் அவர் கில்லாடி. இந்தியாவில் சமீப காலமாக நடந்து வரும் பல ரயில் விபத்துக்களின் பின்னணியில் கோரி இருக்கலாம் என, பலமாக சந்தேகிக்கப்படுகிறது. சங்கிலித் தொடர்
பாகிஸ்தான் உளவு அமைப்புகளின் முழு பாதுகாப்பில் இருந்து இயங்கி வரும் பரக்கத்துல்லாஹ் கோரி, இந்திய பாதுகாப்பு அமைப்புகள், தங்கள் சொத்துக்களை தொடர்ந்து பறிமுதல் செய்வது ஏற்படையது அல்ல என, தொடர்ந்து சீறி வருகிறார். அதற்காகவே இந்திய புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகளை குறிவைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 'குழப்பம் மற்றும் பயத்தை விதைப்பதற்கான ஒரு வழிமுறையாக ரயில்வே கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி பாதிப்பு ஏற்படுத்துவது முக்கியம்' என்று, தன் வீடியோ பதிவில் குறிப்பிட்டிருக்கும் கோரி, பெட்ரோல் பைப் லைன்கள் மற்றும் ரயில்வே துறைக்கு தேவையான பொருட்களை வினியோகிக்கும் அனைத்து சங்கிலித் தொடர்கள் மீதும், தாக்குதல் நடத்தவும் ஆதரவாளர்களை உசுப்பி விட்டுள்ளார்.கூடவே, ஹிந்து தலைவர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது, வன்முறையை ஏவிவிட வேண்டும் என்றும் உரத்த குரலில் பதிவிட்டுள்ளார். இந்திய உளவு அமைப்புகளும், போலீசாரும் தங்கள் அமைப்பு மீது எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு நிலை குலைய மாட்டோம் என்றும், வீடியோ பதிவில் சவாலாக சொல்வது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் டில்லியில், ரிஸ்வான் என்ற பயங்கரவாதி, டில்லி சிறப்பு போலீஸ் படையிடம் சிக்கினார். தனக்கும், பரஹத்துல்லாஹுவுக்கும் இருக்கும் தொடர்பு மற்றும் அசைன்மென்ட்கள் குறித்து, நிறைய விஷயங்களை அவர் கூறியிருக்கிறார். விளக்கப் படம்
பயங்கரவாத பாதைக்கு, இளைஞர்களையும், கல்லுாரி மாணவர்களை அழைத்து வரவும், பயிற்சி அளிக்கவும், தன்னிடம் கோரி கேட்டுக் கொண்டார்; அதன் அடிப்படையில், இந்தியாவில் தான் செயல்பட்டதாகவும் ரிஸ்வான் கூறியுள்ளார். டில்லி, கோல்கட்டா, மும்பை, ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம் என, பல நகரங்களிலும், தங்களுடைய ஐ.எஸ்., இயக்கத்துக்காக நிறைய இளைஞர்களையும், கல்லுாரி மாணவர்களையும் மூளைச் சலவை செய்து, அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவும் பரக்கத்துல்லாஹ் கோரியின் இந்திய நெட்வொர்க் எத்தகைய பலம் வாய்ந்தது என்பதை அறிய உதவியது. 'ரயில்வே நடவடிக்கைகள்- வெளிப்படை தரவுகள்' என்ற தலைப்பில், ஐ.எஸ்., அமைப்பினர் கையேடு ஒன்றை, தங்கள் அமைப்பினருக்கு வழங்கி உள்ளனர். அதற்கு ஏற்பாடு செய்தது பரஹத்துல்லாஹ் கோரி தான் என்றும் ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட கையேட்டில், வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் கருவிகளை வைத்து, எவ்வாறு ரயில்களைக் கவிழ்க்கும் வெடிகுண்டுகளை தயாரிக்க முடியும் என்று சொல்லியிருக்கும் கோரி, விளக்கப் படங்களுடன் விவரித்திருக்கிறார். அந்த வழிமுறைகளைப் பின்பற்றியே, இந்தியாவில் பல்வேறு சதி செயல்ககள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. பயங்கரவாதி கோரியின் வீடியோ பதிவுக்குப் பின், இந்தியா முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், யாரெல்லாம் அவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்ற பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
'உபா' பிரிவிலும் உண்டு!
பரஹத்துல்லாஹ் கோரிக்கு, அபு சுபியான், சர்தார் சாப், பரு போன்ற புனைப் பெயர்கள் உண்டு. அவரது செயல்களின் தீவிரத்தை உணர்ந்து, இந்தியாவின் உள்துறை அமைச்சகம், 2020 அக்டோபரில் கோரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு, அவருடைய பெயர், 'உபா' சட்டத்தின் நான்காம் அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -