சென்னை : நீர்வழித்தடங்களில் அடைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக, வடகிழக்கு பருவமழை 30 செ.மீ., வரை கொட்டியும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட ஏரிகள் நிரம்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சுற்று மழை துவங்குவதற்குள், இப்பிரச்னையை சரிசெய்ய நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 15ம் தேதி 20 செ.மீ., முதல் 30 செ.மீ., வரை கனமழை பெய்தது. ரூ.20 கோடியில் பணி
இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வயல்களில் வெள்ளநீர் சூழ்ந்து, மெல்ல வடிந்து வருகிறது. அதேநேரத்தில் மழை கொட்டியும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து ஏரிகளில், 25 சதவீதத்திற்கு கீழ் நீர் இருப்பு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 100 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 199 ஏரிகளிலும், 25 சதவீதத்திற்கு கீழ் நீர் இருப்பு உள்ளது. நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்புகள் காரணமாகவே ஏரிகளுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.வெள்ளநீரை வெளியேற்ற, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், ஆரணியாறு, கொசஸ்தலையாறு, பாலாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் பயணிக்கும் வெள்ள நீர், விரைவாக சென்று ஏரிகளை நிரப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏரிகள் நிரம்பாதது பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட ஏரிகளில், நீர்வரத்து கிடைத்து, அவை நிரம்பி வழிவது வழக்கம். அத்தகைய நேரங்களில், ஆக்கிரமிப்பாளர்கள், தங்கள் பகுதியில் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்றுவதற்கு, ஏரிகளின் கரைகளை உடைத்து, நீரை வெளியேற்றும் சம்பவங்களும் நடக்கும்.ஆனால் இம்முறை, சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்தும் 25 சதவீதம் அளவிற்கு கூட நீர் நிரம்பவில்லை. அடுத்த மழை பெய்வதற்கு முன், மழைநீர் முறையாக செல்லாததற்கான காரணங்களை ஆராய்ந்து, நீர்வளத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். வறட்சி
சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்றுதான் துவங்கியுள்ளது. டிச., வரை பருவமழை காலம் உள்ளது. முதல் சுற்றிலேயே அதிக மழை பெய்துள்ளது. நீர்வழித்தடங்களில் சிறிய அளவிலான அடைப்புகள் மட்டுமின்றி, வறட்சியால் காய்ந்தும் கிடந்தது. மழைநீரை பூமி உறிஞ்சியதால், ஏரிகளுக்கு நீர் குறைவாகவும், தாமதமாகவும் செல்கிறது.அடுத்த சுற்று மழையில், விரைவாக ஏரிகள் நிரம்ப துவங்கும். ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் கரைகளை உடைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரைகளில் உடைப்பு ஏற்பட்டால், நீர் வெளியேறுவதை தடுப்பதற்கு மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், சாக்கு பைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
செம்பரம்பாக்கத்தில் நீர் வரத்து சரிவு
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.64 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட நீர் இணைப்பு கால்வாய் வழியே செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் வந்து கொண்டு இருந்தது. தற்போது 1.31 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால், போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. வடகிழக்கு பருவமழையில் ஏரி விரைந்து நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு இதே நாளில் ஏரியில் 3.14 டி.எம்.சி., நீர் இருந்தது.
குப்பை கொட்டும் இடமான ஏரிகள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீராதாரங்கள், சென்னை மண்டல நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன.சென்னையில் 28; செங்கல்பட்டில் 564; காஞ்சிபுரத்தில் 381; திருவள்ளூரில் 578 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகள் வாயிலாக, பாசனம், உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் தேவை முன்பு பூர்த்தி செய்யப்பட்டது. நிலத்தடி நீர் இருப்பை தக்க வைப்பதற்கும் இந்த ஏரிகள் முக்கியபங்கு வகிக்கின்றன.நகரமயமாக்கல் காரணமாக, இம்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஏரிகளில், ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை கொட்டும் மையமாகவும், கழிவுநீரை வெளியேற்றும் கட்டமைப்புகளாகவும், பல ஏரிகள் உருமாறியுள்ளன.