தியாகராஜன்,
கட்டுரையாளர், ஆடை வடிவமைப்பாளர்.சாதாரண பனியன் தொழிலாளியாக,
ஆடை தயாரிப்பு தொழிலில் நுழைந்து, இளம் தொழில்முனைவோராக இருப்பவர்.
திருப்பூரில், 3 இடங்களில் தனது நிறுவன கிளைகளைநிறுவியுள்ளார். இதுவரை, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி, 200க்கும்மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுக் கொடுத்துள்ளவர்.வெளியூரில் இருந்து பிழைப்புத்தேடி, தொழில் வாய்ப்பு நிறைந்த திருப்பூருக்கு ஏராளமானோர் வருகின்றனர். அவர்களில் பலர், தொழிலாளிகளாக உள்ளனர்; சிலர், தங்கள் கடும் உழைப்பால், முதலாளிகளாக மாறியுள்ளனர். அந்த வரிசையில், கும்பகோணத்தைச் சேர்ந்த நான், கடந்த, 15 ஆண்டுகள் முன், பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூர் வந்தேன். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நிலையில் ஒரு பனியன் நிறுவனத்தில், சாதாரண கைமடி வேலையில் சேர்ந்தேன்.'அடுத்து என்ன செய்யலாம்?' என்ற கேள்வி மற்றும் தேடல் என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த அடிப்படையில், ஆடை தயாரிப்பின் அடிப்படை எது என்பதை கண்டறியும் ஆவல் வந்தது. அப்போது தான், 'பேட்டர்ன்' எனப்படும் வடிவமைப்புத்துறை மீது ஆர்வம் வந்தது. 'கேட்' (Computer Aided Design) எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உதவியுடன், ஆடை வடிவமைப்பு பயிற்சியை முறையாக கற்றுத்தேர்ந்தேன்.பின், சிறியளவில் சொந்தமாக நிறுவனம் துவங்கி, வர்த்தகர்களிடம் இருந்து 'ஆர்டர்' பெற்று, அவர்கள் விரும்பும் ஆடைகளை வடிவமைத்து வழங்கி வருகிறேன்; தொழில் வளர்ந்தது. மூன்று கிளைகளை நிறுவியுள்ளேன். என் நிறுவனத்தில், ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியும் வழங்கி வருகிறேன். இதுவரை, 500க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று, ஏராளமானோர் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். கல்வி பயில்வது மிக அவசியம்; அதோடு, தாங்கள் கால்பதிக்கும் துறை சார்ந்த பயிற்சியும், அதில் வெற்றி பெறுவதற்கான விடா முயற்சியும் அவசியம். 'அப்டேட்' முக்கியம்
ஆடை துறையை பொறுத்தவரை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்; மாறாக, ஆடைகளின் வடிவமைப்பில் வேண்டுமானால் மாற்றம் ஏற்படலாம். அவர்களின் தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை 'அப்டேட்' செய்து கொள்வது அவசியம்.ஆரம்ப காலங்களில், மனித ஆற்றல் மூலம் மேற்கொள்ளப்படும் 'பேட்டர்ன்' மட்டும் தான் இருந்தது. நாளடைவில், 'கேட்' தொழில்நுட்பம் அவசியமானதாக மாறியது; தற்போது, 'கேட்' இல்லாமல் 'பேட்டர்ன்' இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆடை உற்பத்தி துறையில், இப்பிரிவு முதன்மையானது; முக்கியமானது. ஆடை வடிவமைப்பு என்பது, இத்தொழில்நுட்பம் வாயிலாக எளிதாகிறது; நான்கு பேர் செய்யும் வேலையை ஒருவர் செய்கிறார். நவீன 'சாப்ட்வேர்' வாயிலாக 'பேட்டர்ன்' செய்து கொடுக்கும் போது, துல்லியம் இருக்கும்.இத்துறையை பொறுத்தவரை, தொழில்நுட்பங்களை 'அப்டேட்' செய்வது மிக அவசியம். இதன் அடுத்த கட்டம், '3டி' தொழில்நுட்பம்; நம் ஊரில் பிரபலமடையாவிட்டாலும், அந்த பயிற்சியை பெறுவதிலும், இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் '3டி' தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் ஆடைகள் சந்தைக்கு வரும்; அப்போது, 'கேட் பேட்டர்ன் மேக்கர்'களுக்கான தேவை மேலும் கூடும். அதிகரிக்கும் ஆர்வம்
'பேட்டர்ன்' துறையை பொறுத்தவரை, இளைஞர் கள் தொழில்நுட்பத்தை திறம்பட கற்றுக்கொள்ள அதற்கேற்ற பாடப்பிரிவை தான், கல்லுாரிகளிலும் தேர்ந்தெடுத்து படிக்கின்றனர்.பெரும்பாலான பனியன் நிறுவனங்களில், பல ஆண்டுகளாக பணிபுரியும், 50 வயது கடந்த 'பேட்டர்ன் மாஸ்டர்'கள், 'கேட்' தொழில்நுட்பத்தை கற்காமல், தங்களது அனுபவத்தின் வாயிலாக, மனித ஆற்றல் வாயிலாகவே 'பேட்டர்ன்' செய்கின்றனர்.தொழில்நுட்பம் கற்று இப்பணிக்கு வரும் இளைஞர்களுடன், ஈடுகொடுத்து பணியாற்றுவதில் அவர்களுக்கு சிரமம் உள்ளது. தொழில்நுட்பம் கற்று வருபவர்களுக்கு தான், நிறுவனங்கள் வாய்ப்பும், முக்கியத்துவமும் வழங்குகின்றன.எனவே தான், பனியன் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணிபுரியும் 'பேட்டர்ன் மேக்கர்கள்' கூட, 'கேட்' தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்கின்றனர். காலை, 6:00 மணியில் இருந்து, 8:00 மணி வரை எங்கள் நிறுவனத்துக்கே வந்து பயிற்சி பெறுகின்றனர்; பின், தங்கள் பணிக்கு சென்று விடுகின்றனர். நிதானம் வேண்டும்
'கேட் பேட்டர்ன்' பயிற்சி பெற்றவர்களுக்கு கேரளா, மும்பை, ைஹதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது; பயிற்சி பெற்ற பலர், அங்கு வேலை வாய்ப்பும் பெற்றுள்ளனர். துவக்கத்தில், மாதம், 12 ஆயிரம் முதல், 15 ரூபாய் சம்பளம் பெறும் அவர்கள், தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் பட்சத்தில், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், 30 ஆயிரம் ரூபாய் வரை கூட சம்பளம் பெறுகின்றனர். சிலர், சொந்தமாக 'பேட்டர்ன் சென்டர்' வைத்து, நிறுவனமாக செயல்பட்டு வருகின்றனர். பல நிறுவனங்களில் 'ஆர்டர்' அதிகம் வந்துவிட்டால், 'பேட்டர்ன் மேக்கர்'களுக்கான தேவையும் அதிகரித்து விடுகிறது. அதுபோன்ற சமயத்தில், பனியன் நிறுவனத்தினர், எங்களை போன்றவர்களுக்கு, 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் 'பேட்டர்ன்' செய்து கொடுக்கும் வேலையை வழங்குகின்றனர். தொழில் முனைவோராக மாறுவதற்கு, மத்திய, மாநில அரசுகள் 'ஸ்டார்ப் அப்' வாயிலாக ஊக்குவிப்பு வழங்குகின்றன.புதிதாக இத்துறையில் கால்பதிக்கும் இளைஞர்கள், தேர்ந்தெடுத்துள்ள துறையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்று, காலத்துக்கேற்ப தங்களை 'அப்டேட்' செய்து, நிதானமாக செயல்பட்டால், நிறைய சம்பாதிக்க முடியும்.தற்போது, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் 'ஆர்டர்' குறைவு என்பதால், ஆடை தொழிலில் மந்த நிலை நிலவுகிறது என்ற பேச்சு, பரவலாக இருந்து வருகிறது. ஆனால், ஆடை துறை என்பது, நிலையானது; அதற்கு அழிவில்லை. அந்த வகையில், திருப்பூருக்கான 'ஆர்டர்' இருந்துகொண்டே தான் இருக்கும்; மந்த நிலை என்பது, தற்காலிகமானது தான். ஆடை உற்பத்தி, வடிவமைப்பு போன்ற துறைகளில் திட்டமிட்டு செயலாற்றுபவர்களுக்கு இந்த மந்தநிலை, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை; அவர்கள் தொடர்ந்து தொழில் செய்கின்றனர்.