உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மெட்ரோ திட்டத்துக்காக வரிசையாக ரத்தாகும் திட்டங்கள்! கைவிடுவதில் கைதேர்ந்த அதிகாரிகள் 

மெட்ரோ திட்டத்துக்காக வரிசையாக ரத்தாகும் திட்டங்கள்! கைவிடுவதில் கைதேர்ந்த அதிகாரிகள் 

கோவையில் வராத மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, விரைவில் நிறைவேற்ற முடிந்த பல திட்டங்களும் கைவிடப்படுவது தொடர்கிறது.மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, கோவை நகரம் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால், 2011ல் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான விரிவான திட்ட அறிக்கை, கடந்த ஜூலையில் தான் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தம் ரூ.9,700 கோடி மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்படுமென்று, தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கான நிதியுதவி வழங்க ஒப்புக் கொண்டிருந்த ஜெர்மன் வங்கி கைவிரித்த பின், புதிய வங்கி எதுவும் கிடைக்கவில்லை. இந்த திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. கடந்த பிப்.,16ல்தான் இதற்கான கோப்பு அனுப்பப்பட்டு, பிப்.,19ல், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையால் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு, மத்திய அரசின் ஒப்புதலையும், நிதியையும் தமிழக அரசு எதிர்பார்த்துள்ளது. ஒப்புதலும், மத்திய அரசின் பங்களிப்பு நிதியும் உடனடியாகக் கிடைத்தாலும், நிதியுதவி வழங்குவதற்கான உரிய வங்கி கிடைக்காவிட்டால், இத்திட்டம் துவக்கப்பட வாய்ப்பில்லை. இதனால், கோவை மெட்ரோ ரயில் திட்டம், இப்போதைக்கு வருவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை.

திட்டங்கள் ரத்தாகின்றன

ஆனால், வராத மெட்ரோ ரயில் திட்டத்தைக் காரணம்காட்டி, பல்வேறு திட்டங்களையும், தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கைவிட்டு வருவது மட்டும் தொடர்ந்து வருகிறது. தமிழக அரசின் திட்டப்படி, முதற்கட்டமாக சத்தி ரோடு மற்றும் அவிநாசி ரோட்டில், மெட்ரோ ரயில் தடம் அமைப்பதைச் சுட்டிக்காட்டி, சரவணம்பட்டி பகுதியில் பாலம் கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கி, டெண்டர் விடும் சூழலில், இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சத்தி ரோட்டில் கணபதியிலிருந்து சரவணம்பட்டி வரை, ரோடு விரிவாக்க நிலமெடுப்புக்கு, நகர ஊரமைப்புத்துறை நிதி ஒதுக்கியும் அதுவும் துவக்கப்படவில்லை. மெட்ரோ தடத்துக்காக, கூடுதல் நிலமெடுக்க பிரேரணை தயாரிப்பதாகக் காரணம் காட்டப்பட்டுள்ளது.காந்திபுரம் மேம்பாலத்தில், இறங்குதளம் அமைக்கும் திட்டமும், மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் வருவதைச் சுட்டிக்காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்காநல்லுார் சந்திப்பில் மத்திய அரசின் நிதியில் பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடுவதும், இதே திட்டத்துக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தடாகம் ரோடு, லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவதும், ரத்து செய்யப்பட்டுள்ளது.இப்படியாக, கோவையில் வராத மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, வரிசையாக பல்வேறு திட்டங்களும் கைவிடப்படுகின்றன; அல்லது தள்ளிப் போடப்படுகின்றன. இனியாவது, கோவை மெட்ரோ வழித்தடங்களை தமிழக அரசு தெளிவுபடுத்துவது அவசர அவசியம். இல்லாவிடில், திட்டங்களைக் கைவிடுவதில் கில்லாடிகளான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இன்னும் பல திட்டங்களை கைகழுவுவது உறுதி.

மாநில அரசுதான் செய்ய வேண்டும்!

கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு, 'தமிழக அரசு அனுப்பியுள்ள விரிவான திட்ட அறிக்கை, ஒப்புதலுக்குப் பெறப்பட்டுள்ளது. இத்தகைய நகர்ப்புற போக்குவரத்துத் திட்டங்களை, அந்தந்த மாநில அரசுகளே செயல்படுத்த வேண்டும். திட்டத்தின் தேவை மற்றும் சாத்தியக்கூறுகளைப் பார்த்து, மத்திய அரசு நிதியுதவி அளிப்பதைப் பரிசீலிக்கும்' என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ