உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராமேஸ்வரத்தில் சர்வதேச விமான நிலையம் அவசியம்; சரக்கு போக்குவரத்து, சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்

ராமேஸ்வரத்தில் சர்வதேச விமான நிலையம் அவசியம்; சரக்கு போக்குவரத்து, சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்

சென்னை : ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க, ராமநாதபுரம் மாவட்டத்தில் இடம் தேடும் பணியை, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் துவக்கி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவில் உள்ளது. அங்கு புனித நீராடி வழிபாடு நடத்த, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம், தனுஷ்கோடியில் கடலில் மூழ்கிய சர்ச், ரயில் நிலையம், அரிச்சல்முனை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

ஏற்றுமதி

ராமநாதபுரத்தில் மீன்பிடி முக்கிய தொழிலாக உள்ளது. அங்கிருந்து, மீன், கருவாடு உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள், முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில், இரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் வந்தார். ராமேஸ்வரம் கடல் மற்றும் கோவிலின் புனித தீர்த்த குளங்களில் நீராடி, ராமநாத சுவாமியை வழிபட்டார். அவரது வருகைக்குப் பின், ராமேஸ்வரம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ராமேஸ்வரம் வர விரும்புவோர், மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டி உள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்ல, மூன்று மணி நேரமாகும். ராமநாதபுரத்திற்கு சுற்றுலா பயணியர் வருகையையும் மற்றும் தொழில் முதலீடுகளையும் ஈர்க்கும் பணியில், அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியானது. அதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் விமான நிலையத்திற்கு, ராமநாதபுரத்தில் இடம் தேடும் பணியில், டிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

அங்கு, விமான நிலையம் மட்டுமின்றி, மீன்கள் ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக, சரக்கு விமானங்களை இயக்கும் வகையில், பிரமாண்ட சர்வதேச விமான நிலையமாக, ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது, தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கடலாடி, கமுதி, மண்டபம், திருவாடானை, வாலிநோக்கம் உள்ளிட்ட இடங்களில், கடல் உணவு பொருட்கள், வேளாண் பொருட்களை பதப்படுத்துதல், உப்பு, ஜவுளி, புதுப்பிக்கத்தக்க மின்சாரம், உதிரிபாக உற்பத்தி போன்ற தொழில்களில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.கிளிஞ்சலை பயன்படுத்தி, பல்வேறு கலைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. தென்னை நார் பொருட்கள், கடல் உணவு பொருட்கள், மீன்பிடி வலை, புதுப்பிக்கத்தக்க மின்சார தொழில்களில் புதிய முதலீடுகள் வர உள்ளன. எனவே, ராமேஸ்வரம் விமான நிலையத்தில், பயணியர் விமானம் மட்டுமின்றி, சரக்கு விமானங்களும் இயக்கப்பட வேண்டும்.இதனால், ஓசூரில் 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதுபோல், ராமநாதபுரத்திலும், சரக்கு முனையங்களுடன் கூடிய, பெரிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும். இது சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

500 ஏக்கர் இடம் தேடும் 'டிட்கோ'

ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க, ராமநாதபுரம் மாவட்டத்தில், 500 ஏக்கர் இடத்தை அடையாளம் காணும் பணியை, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் துவக்கி உள்ளது. இந்நிலம் போதுமானதாக இருக்காது. பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற தொழில் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கூடுதல் இடங்களை,, டிட்கோ கண்டறிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R sampath
ஏப் 06, 2025 16:59

பஸ் ஸ்டாண்ட் போல விமான நிலையங்கள் தேவை இல்லை. பொது மக்கள் வரிப்பணம் தண்டம்


R sampath
ஏப் 06, 2025 16:46

பொது மக்களுக்கு விமான சேவை தேவை இல்லை. அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் அரசாங்க செலவில் பயணம் செய்ய.


S.jayaram
மார் 23, 2025 09:52

அய்யா ஏற்கனவே மதுரை விமான நிலையமே 60 வருடங்களை கடந்தும் இன்னும் முழுமையாக செயல்படவில்லை இந்நிலையில் அங்கு ஒரு சர்வதேச விமானநிலையம் அமைப்பது என்பது தேவையில்லாத வேலை, ஏற்கனவே அந்தப்பகுதி வறண்ட பகுதி எனவே அங்கு தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பதுதான் புத்திசாலித்தனம். தூத்துக்குடியில் உள்ள விமானதளம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுகொண்டு இருக்கிறது அதையும் சர்வதேச விமானநிலையம் ஆக ஆக்கப்போவதாக செய்திகள் வளம் வருகின்றன. எனக்கென்னவோ, ராமேஸ்வரம் அருகில் உச்சிப் புளியில் கடற்படையின் விமான தளம் உள்ளது, இருந்தும் ராமேஸ்வரம் புராஜக்ட் தேவை என்றால் ஏதோ உள்நோக்கத்துடன் செய்வதாக தெரிகிறது.


SP
மார் 22, 2025 22:16

கடந்த மார்ச் மாதமே மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மூலமாக ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது


Rajesh
மார் 22, 2025 19:16

விமான நிலையம் அவசியம் அதற்கு முன் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட (under ground sewerage system) நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்


கூறமுதலி
மார் 22, 2025 18:32

முதல்ல ராமேஸ்வரத்தில் ஒரு நல்ல சவுத் இந்தியன் ஹோட்டல் சைவ சாப்பாடு சாப்பிட ஹோட்டல் வைங்கப்பா ஒரு ஓட்டலும் நல்லா இல்ல வர்ற பக்தர்கள் எல்லாம் தங்கினா எந்த ஓட்டலில் சாப்பிடுவாங்க ஒரு ஹோட்டல் நல்லா இல்ல


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 22, 2025 12:35

விமான நிலையம் வருவது இருக்கட்டும்....முதலில் கோவிலை சுற்றி உள்ள தனியார் தங்கும் விடுதிகளை ஒழித்து கோவில் சார்பாக தங்கும் விடுதிகளும், சுகாதாரமற்ற "நவீன" கழிப்பறை குளியல் அறைகளை ஒழித்தும் மற்றும் புனித கிணறுகளில் நீர் இறைக்கும் கோவில் அலுவலர்கள் கட்டணம் வாங்கிக்கொண்டு குழுக்களுக்கு மட்டுமே தண்ணீர் இறைப்பதை நிறுத்தி அனைத்து கிணறுகளில் இருவர் நின்று அனைவருக்கும் பொதுவாக நீர் இறைக்க வைக்க வேண்டும்.....இவைகளை செய்து விட்டு விமான நிலையத்தை அமைக்க முயற்சியுங்கள்..... வருடத்திற்கு இரண்டு முறை சென்று சங்கடமும் மனவேதனையோடு வரும் என்னைப்போன்ற எண்ணற்வர்களின் கோரிக்கையும் இதுவே.....!!!


Rajan
மார் 22, 2025 10:34

The airport name is Rameshwaram which is to be located away from Rameshwaram.. This is called T Model cheating


புதிய வீடியோ