சென்னை : சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் ஆண்டுதோறும் குறைந்து வருவதால், தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.சட்டசபையில் எழுப்பப்படும் தொகுதி பிரச்னைகளுக்கு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து, தீர்வு காண வழி செய்கின்றனர். அதனால், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது, எம்.எல்.ஏ.,க்களுக்கு முக்கிய நிகழ்வாக உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், 2011 முதல் 2020 வரை, சட்டசபை கூட்டத்தொடர் முறையாக நடத்தப்படவில்லை என, தி.மு.க., தரப்பில் புகார் கூறப்பட்டது. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆண்டுதோறும், 100 நாட்கள் வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்' என, அக்கட்சி வாயிலாக தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., அரசு, 2021 மே மாதம் பொறுப்பேற்றது. அந்த ஆண்டு, 28 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து, 2022ல் 35 நாட்களும், 2023ல் 30 நாட்களும் சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. நடப்பாண்டு இதுவரை, 17 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது. வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில், சட்டசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதனால், நடப்பாண்டு கணக்கில் கூடுதலாக இரு நாட்கள் சேர்ந்துள்ளன.தொகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் உறுதியளித்து இருந்தனர். அதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், சட்டசபை கூட்டம் அதிக நாட்கள் நடத்தப்படாததால், தொகுதி பிரச்னைகள் குறித்து பேச முடியாத நிலை, எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வினரோ, சபை நடக்கும் நாட்களிலும் முழுமையாக பங்கேற்காமல், வெளிநடப்பு செய்வதையே விரும்புகின்றனர். குறைவாக நடந்த சட்டசபை நாட்களையும், அ.தி.மு.க., பயன்படுத்த தவறி விட்டது.கடந்த 2011ல், சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., ஆறு முறையும்; 2022ல், 12 முறையும்; 2023ல், 13 முறையும், நடப்பாண்டு, நான்கு முறையும் வெளிநடப்பு செய்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்காமல், புறக்கணித்த நாட்களும் உள்ளன.சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இதில், பல்வேறு கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில், குறைந்த நாட்களே சபையை நடத்த முடிவு செய்யும் போது, அதற்கு பெரிதாக யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், வெளியே வந்து, 'சட்டசபையை அதிக நாட்கள் நடத்த கேட்டோம்; சபாநாயகர் சம்மதிக்கவில்லை' என, பேட்டி அளிப்பதையே தான் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
2 நாள் கூட்டத்திற்கு ரூ.3 கோடி செலவு
தி.மு.க., அரசு, 2021ல் பொறுப்பேற்ற பின், கொரோனா பரவல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டசபை கூட்டம் நடந்து வந்தது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததும், மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபை மாற்றப்பட்டது. அங்கு, 5 கோடி ரூபாய் செலவில் இருக்கைகள், மின் சாதனங்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டன.காகிதமில்லா சட்டசபையை நடத்தும் வகையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் மேஜையில் தொடுதிரை சிறு கணினிகள் பொருத்தப்பட்டன. ஆங்காங்கே எல்.இ.டி., திரைகள் வைக்கப்பட்டு, சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுகின்றன.தற்போது, இருநாள் மட்டுமே நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்திற்காக, மேஜைகள், கதவுகளுக்கு வார்னிஷ் பூசுதல், மைக், தொடுதிரை சிறு கணினிகள், மின் விளக்குகள், ஸ்பீக்கர் போன்றவற்றை பழுதுபார்த்தல், சுவர்களுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.இது மட்டுமின்றி, ஆண் மற்றும் பெண் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றப்படுகின்றன. இப்பணிகளுக்கு, 3 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.