சென்னை : பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், ஆட்டோக்களில் வழக்கத்தை விட, பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் சொல்லப்படுகிறது.தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய்; காத்திருப்பு கட்டணம், ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இரவு நேரத்தில் கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து, போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது. கட்டணத்தை மாற்றி அமைத்து, 11 ஆண்டுகளாகி விட்டன. அரசு அறிவித்தபடி, 'டிஜிட்டல் மீட்டர்' வழங்கவில்லை. எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டியும் அமைக்கவில்லை. இந்நிலையில், எரிபொருள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் விலை உயர்வை காரணம் காட்டி, கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோக்களில் 50 சதவீதம் வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது..கனமழை, பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களிலும், ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஆரம்ப கட்டணமே, 120 ரூபாய் என்கின்றனர். தமிழகம் முழுதும் இந்நிலை உள்ளது. இதனால், பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னை போன்ற நகரங்களில், ஆட்டோ பயணம் என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. குறிப்பாக, பெண்கள், முதியோர், ஆட்டோக்களில் அதிகம் பயணம் செய்கின்றனர். கனமழை, பண்டிகை நாட்களில் பயணியரின் தேவையை பயன்படுத்தி, கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர்.தீபாவளியின் போது, சைதாப்பேட்டையில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல, ஆட்டோவுக்கு, 800 ரூபாய் கட்டணம் கேட்டனர். இது, சொந்த ஊருக்கு செல்லும், அரசு பஸ் கட்டணத்தை விட அதிகம். எனவே, ஆட்டோவில் நியாயமான கட்டணம் வசூலிக்கும் வகையில், அரசு பிரத்யேக செயலியை அறிமுகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்டோக்களுக்கு கட்டணத்தை மாற்றி அமைத்து, புதிய செயலியை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. 'ஆட்டோ நல வாரியம் வழியே, ஆட்டோ விபரங்கள் சேகரிக்கப்பட்டு, மொபைல் போன் செயலியில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புது செயலியை அரசு அறிவிக்கும்' என்றனர்.